

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரிக்குள் சேர்க்காமல் இருப்பது குறித்து தொடரப்பட்ட மனுவை ஏற்று கேரள உயர் நீதிமன்றம், அதுகுறித்து விளக்கம் கேட்டு ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
வழக்கறிஞர் அருண் பி வர்கீஸ் மூலம் கேரள மாநில காந்தி தர்ஷன்வேதி பொதுநலன் மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டில் சமீபத்தில் உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலையால், பொருளாதார நிலைத்தன்மை மட்டும்பாதிக்கப்படாமல், சாமானிய மக்கள், குறைந்த வருவாயில் குடும்பம் நடத்தும் மக்களும் கடுமையான சுமையையும், பாதிப்பையும் அடைந்துள்ளார்கள். இது அரசியலமைப்புச்சட்டம் வழங்கிய வாழ்வதற்கான உரிமை பிரிவு21 மீறுவதுபோல் இருக்கிறது.
ஒவ்வொரு மாநிலத்திலும் பெட்ரோல், டீசலுக்கு ஒவ்வொருவிதமான வரி விதிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாநிலங்களும் தங்களுக்குத் தேவையான வரிக்கொள்கையை பின்பற்றி வருகின்றன. அரசியலமைப்புச் சட்டம் 279ஏ(6)ன்படி, தேசியஅளவில் ஒரேமாதிரிாயன சந்தையை உருவாக்க வேண்டும்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப எண்ணெய்நிறுவனங்கள் பெட்ரோல்,டீசல் விலையை நிர்ணயிக்கின்றன. ஆனால், மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரிதான் 60 சதவீதம் இருக்கிறது.
ஆதலால், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவந்தால், நாடுமுழுவதும் ஒரேமாதிரியான சந்தை உருவாகும், வரிவிதிக்கும் அதிகபட்சம் 28 சதவீதத்துக்கு மேல் செல்லாது. ஆதலால் பெட்ரோல், டீசலை ஏன் ஜிஎஸ்டிவரிவிதிப்புக்குள் சேர்க்கவில்லை என்பதற்கும், ஜிஎஸ்டிவரிக்குள் ஏன் சேர்க்கக்கூடாது என்பதற்கும் ஜிஎஸ்டி கவுன்சிலிடம் விளக்கம் கேட்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது
இந்த மனு கேரள உயர் நீதிமன்ற தலைமைநீதிபதி எஸ்.மணிக்குமார், நீதிபதி ஷாஜி பி சாலி ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, அடுத்த 10 நாட்களுக்குள் ஜிஎஸ்டி கவுன்சில் விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கூறி விசாரணயை 19ம்தேதிக்கு ஒத்திவைத்தார்