

மேகேதாட்டுவில் புதிய அணை கட்டுவதற்கான பணிகளை விரைவில் தொடங்க வலியுறுத்தி கர்நாடக காங்கிரஸார் பாத யாத்திரை மேற்கொள்ள இருப்பதாக சித்தராமையா தெரிவித்தார்.
இதுகுறித்து கர்நாடக முன்னாள் முதல்வரும் எதிர்க் கட்சித் தலைவருமான சித்தராமையா பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் புதிய அணை கட்டுவதால் தமிழ்நாட்டுக்கு எவ்விதப் பிரச்சினையும் ஏற்படாது. இருப்பினும் அங்குள்ள கட்சியினர் அரசியல் லாபத்துக்காகப் பிரச்சினையை கிளப்பி விடுகின்றனர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு உரிய நீரை வழங்குவதாகக் கர்நாடகா அறிவித்துள்ளதால் தமிழ்நாடு அரசு அச்சம்கொள்ள வேண்டியதில்லை.
கர்நாடகாவில் உற்பத்தியாகும் காவிரி நீரைக் கொண்டு கர்நாடக நிலப்பரப்புக்குள் அணை கட்டுவதற்கு யாருடைய அனுமதியும் தேவை இல்லை. உச்ச நீதிமன்றமும் மத்திய அரசும் கூடத் தடை விதிக்கவில்லை. எனவே மேகேதாட்டுவில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடகாவுக்கு முழு உரிமை உள்ளது. இருப்பினும் கர்நாடக அரசு இந்தத் திட்டத்தைத் தொடங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.
எனவே மேகேதாட்டு திட்டப் பணிகளை விரைவாகத் தொடங்க வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் வரும் டிசம்பரில் மேகேதாட்டுவில் இருந்து பெங்களூரு வரை பாத யாத்திரை நடத்த இருக்கிறோம். நான் முதல்வராக இருந்தபோது சமர்ப்பித்த திட்ட வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்காமல் இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் கர்நாடகாவுக்கு நியாயமாக நடந்துகொள்ள வேண்டும்''.
இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.