

வருங்கால வைப்பு நிதியை (பிஎப்) எடுக்கும்போது, அதில் கிடைத்துள்ள 60 சதவீத தொகைக்கு வரி செலுத்த வேண்டும் என்று பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது. இதனை நிதி அமைச்சர் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி பிரதமர் நரேந்திரமோடி அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பட்ஜெட் மீதான அறிவிப்பின் காரணமாக பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் மத்திய அரசுக்கு வந்தன. பா.ஜ.க. தொழிற்சங்கத்தில் இருந்தும்கூட எதிர்ப்பு வந்தது. சில வழிகளில் இந்த அறிவிப்பை மாற்ற மத்திய அரசு முயற்சிப்பதாக தெரிகிறது. இதில் இந்த வரியை நீக்குவது குறித்த பரிசீலனையும் இருக்கிறது. முன்னதாக இந்த யோசனையை மறு பரிசீலனை செய்யுமாறு ஜேட்லியிடம் பிரதமர் கூறியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பாக இரண்டு நாட்களுக்கு முன் பிரதமர் அலுவலகத்தில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது. அப்போது பட்ஜெட் மீதான விவாதத்துக்கு ஜேட்லி பதில் அளிக்கையில் இந்த வரி விதிப்பு தொடர்பான விவரத்தை அளிப்பார் என்று கூறப்பட்டது.
பட்ஜெட்டில் நிகழ்ந்த தவறுகளுக்கு உரிய திருத்தம் மேற்கொள்ளும் நடவடிக்கை வரவேற்கத்தகுந்ததே என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு கிடைத்த வெற்றி என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் டாம் வடக்கன் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் பிரதமர் நேரடியாக தலையிட்டுள்ளதை பாஜக பெரிதும் பாராட்டியுள்ளது.