இந்திய அரசிடமிருந்து ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தைப் பெற - இடைத்தரகருக்கு ரூ.65 கோடி லஞ்சம் வழங்கியது தஸ்ஸோ நிறுவனம்: பிரான்ஸ் புலனாய்வு ஊடகம் தகவல்

இந்திய அரசிடமிருந்து ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தைப் பெற - இடைத்தரகருக்கு ரூ.65 கோடி லஞ்சம் வழங்கியது தஸ்ஸோ நிறுவனம்: பிரான்ஸ் புலனாய்வு ஊடகம் தகவல்
Updated on
1 min read

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை பெற தஸ்ஸோ நிறுவனம் இடைத்தரகருக்கு ரூ.65 கோடி லஞ்சம் வழங்கியது என்று பிரான்ஸ் புலனாய்வு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரான்ஸின் தஸ்ஸோ நிறுவனத்திடம் இருந்து ரூ.59,000 கோடியில்36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க கடந்த 2016-ம் ஆண்டில்மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. கூடுதல் விலைக்கு விமானம் வாங்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

மேலும் விமானங்களின் உதிரி பாகங்களை தயாரிக்கும் ஒப்பந்தம், பொதுத்துறை நிறுவனத்துக்கு வழங்கப்படாமல் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதை எதிர்க் கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த சூழலில் பிரான்ஸின் இணையதள புலனாய்வு ஊடகமான மீடியாபார்ட், ரஃபேல் ஒப்பந்தத்தைப் பெற இந்தியாவை சேர்ந்த இடைத்தரகருக்கு தஸ்ஸோநிறுவனம் லஞ்சம் வழங்கியிருப்பதாக கடந்த ஏப்ரலில் செய்தி வெளியிட்டது. இதுதொடர்பாக பிரான்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதைத் தொடர்ந்து மீடியாபார்ட் ஊடகம், கடந்த 7-ம் தேதி மீண்டும் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதில், “ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை பெற இடைத்தரகர் சூசேன் குப்தாவுக்கு ரூ.65 கோடி லஞ்சம் அளிக்கப்பட்டது. கடந்த 2004 முதல் 2013 வரையில் லஞ்ச பணம் கைமாறியுள்ளது.

இதுதொடர்பான ஆதாரங்கள் கடந்த 2018 அக்டோபரில் சிபிஐ,அமலாக்கத் துறைக்கு கிடைத்தது. ஆனால் இரு புலனாய்வு அமைப்புகளும் லஞ்ச விவகாரம்குறித்து விசாரணை நடத்தவில்லை” என்று தெரிவித்துள்ளது.

மீடியாபார்ட் சுட்டிக் காட்டியுள்ள இடைத்தரகர் சூசேன் குப்தா, அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் தொடர்புடையவர் ஆவார்.

காங்கிரஸ் ஆட்சியில்..

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் அமித் மாள்வியா ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், “மீடியாபார்ட் செய்தி யின்படி கடந்த 2004 முதல் 2013 வரையிலான காலத்தில் சூசேன் குப்தாவுக்கு லஞ்ச பணம் கைமாறியுள்ளது. அப்படி யென்றால் முந்தைய காங்கிரஸ் அரசு லஞ்ச பணத்தை பெற்றுள்ளது. ஆனால் ஒப்பந்தத்தை இறுதி செய்யவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்ற பிறகு பிரான்ஸ் அரசுடன் லஞ்ச லாவண்யமின்றி ஒப்பந்தம் செய்யப்பட்டது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in