Published : 09 Nov 2021 03:08 AM
Last Updated : 09 Nov 2021 03:08 AM

ஐஐடி-யில் படிக்க இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த பணமின்றி தவித்த தெலங்கானா பழங்குடியின மாணவி: மாநில அமைச்சர் கே.டி.ராமா ராவின் ட்விட்டர் கோரிக்கையால் குவிந்த நிதி

ஹைதராபாத்

ஐஐடி உயர்கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படிக்க இடம் கிடைத்தும், கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் பழங்குடியின மாணவி தவித்து வந்தார். அவருக்கு உதவுமாறு தெலங்கானா அமைச்சர் கே.டி.ராமா ராவ் ட்விட்டரில் பதிவிட்டதால் அவருக்கு உதவிகள் குவிந்து வருகின்றன.

தெலங்கானா மாநிலம் மாமிடிகுடேம் கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயதான கரம் ஸ்ரீலதா. பழங்குடியின மாணவியான இவர், ஐஐடி-ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்றிருந்தார். இதையடுத்து வாரணாசியில் உள்ள ஐஐடி-யில் பி.டெக். படிப்பில் சேர இவருக்கு இடம் கிடைத்தது.

`தி இந்து` செய்தி..

ஆனால் அவ்வளவு தூரத்துக்கு மகளை அனுப்பி வைக்கவும் அங்கு சேர்ந்து படிக்கவும் ஸ்ரீலதாவின் பெற்றோரிடம் பண வசதி இல்லை.

இதையடுத்து அவரது நிலை குறித்து `தி இந்து’ ஆங்கிலப் பத்திரிகையில் செய்தி வெளியானது. இதைப் பார்த்த நல்கொண்டாவைச் சேர்ந்த டாக்டர் ஜே.பி. ரெட்டி என்பவர், மாணவியின் படிப்புக்கு தெலங்கானா நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.டி. ராமா ராவ் உதவ வேண்டும் என்று ட்விட்டரில் கேட்டுக் கொண்டார். இதைப் பார்த்த அமைச்சரும், ஸ்ரீலதாவுக்கு உதவ வேண்டும் என்று சமூக வலைதளமான ட்விட்டரில் பதிவிட்டார்.

மேலும் கே.டி.ராமா ராவின் அலுவலகத்திலிருந்து அதிகாரிகள் அந்த பழங்குடியின பெண்ணை தொடர்புகொண்டு தேவையான உதவிகளை வழங்குவோம் என்று தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து பல்வேறுஅரசுசாரா அமைப்புகளும், பொதுமக்கள் பலரும் ஸ்ரீலதாவுக்கு உதவ முன்வந்துள்ளனர். அவர்கள் `தி இந்து` அலுவலகத்தைத் தொடர்புகொண்டு நிதி உதவி செய்யத் தயார் என்று கூறியுள்ளனர்.

இதுகுறித்து ஸ்ரீலதா கூறும்போது, “அமைச்சர் கே.டி.ராமா ராவ் உட்பட தாராள மனப்பான்மை கொண்ட பலர் உறுதியளித்த ஊக்கம் மற்றும் ஆதரவால் நான் வியப்படைந்துள்ளேன். ஐஐடி-யில் பி.டெக். படிப்பில் சேர தற்போது ஆர்வமாக உள்ளேன்” என்றார்.

கல்வி உதவித்தொகை

இந்நிலையில், ஐஐடி, ஐஐஐடி, என்ஐடி, ஐஐஎம், மத்திய பல்கலைக்கழகங்களில் சேரும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு தேவையான அனைத்து கல்வி உதவித் தொகையையும் வழங்கும் திட்டத்தை மாநில அரசு அமல்படுத்தி உள்ளது என்றும் ஸ்ரீலதாவுக்கு தேவையான உதவியை வழங்குமாறு பழங்குடியினர் நல மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் பத்ராசலம் உள்ளிட்டோர் உத்தரவிட்டுள்ளதாகவும் அரசு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x