

டெல்லியில் திரையரங்கில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான வழக்கில் உரிமையாளர்களான அன்சால் சகோதரர்களுக்கு டெல்லி நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
டெல்லியில் உப்ஹார் என்ற திரையரங்கில் கடந்த 1997 ஜூன் 13-ம் தேதி ஏற்பட்ட தீ வபத்தில் 59 பேர் இறந்தனர். இதுதொடர்பாக தியேட்டர் உரிமையாளர்களும் ரியல் எஸ்டேட் அதிபர்களுமான சகோதரர்கள் கோபால் அன்சால், சுசில் அன்சால் ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. ஏற்கெனவே அவர்கள் சிறையில் இருந்த காலத்தை கருத்தில் கொண்டு விடுவிப்பதாகவும் இருவருக்கும் தலா ரூ.30 கோடி அபராதம் விதித்து அந்தத் தொகையை மருத்துவமனை கட்ட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் சாட்சியங்களை அழித்ததாக அன்சால் சகோதரர் களுக்கு எதிராக தனி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு டெல்லி தலைமை பெரு நகர நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் நீதிபதி பங்கஜ் சர்மா நேற்று தீர்ப்பளித்தார். அன்சால் சகோதரர்கள் சாட்சிகளை கலைத்ததற்கான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி கோபால் அன்சால், சுசில் அன்சால் சகோதரர்களுக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தார். இருவருக்கும் தலா ரூ.2.25 கோடி அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார். -பிடிஐ