

உத்தர பிரதேச மாநில ஷியா வஃக்பு மத்திய வாரியத்தின் முன்னாள் தலைவர் வசீம் ரிஜ்வீ. ஷியா பிரிவின் தலைவர்களில் ஒருவராகவும் கருதப்படும் இவர், தம் மதத்திற்கு எதிராக அவ்வப்போது சர்ச்சைகளை கிளப்பி வருகிறார். கடைசியாக சில மாதங்களுக்கு முன் ரிஜ்வீ உச்ச நீதிமன்றத்தில் திருக்குர்ஆனின் 26 வசனங்களை நீக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த பொதுநல வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள் அமர்வு, ரிஜ்வீக்கு ரூ.50,000 அபராதமும் விதித்தது.
இந்நிலையில், ‘முகம்மது’ எனும் பெயரில் இந்தியில் ஒரு நூலை ரிஜ்வீ வெளியிட்டுள்ளார். இஸ்லாமியர்களின் இறைத்தூதரான நபிகள் நாயகத்தின் வரலாறு இந்நூலில் எழுதப்பட்டிருப்பதாக வசீம் ரிஜ்வீ கூறியுள்ளார்.
இதுகுறித்து வசீம் ரிஜ்வீ மேலும் கூறுகையில், ‘‘நபிகள்நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் எனது நூல்,இஸ்லாம் வந்தது ஏன்? அம்மதத்தில் பல தீவிரவாதக் கொள்கைகள் இருப்பதன் காரணம் என்ன போன்ற கேள்விகளுக்கும் விடைஅளிக்கிறது’’ எனக் குறிப் பிட்டுள்ளார்.
இந்த நூல், காஜியாபாத் திலுள்ள மகாகால் கோயில் மடத்தின் அதிபதியான நரசிம்ம ஆனந்த சரஸ்வதி எனும் சாதுவால் வெளியிடப்பட்டுள்ளது. அவர் எழுதிய நூலுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று முஸ்லிம்கள் உ.பி. அரசிடம் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் உ.பி.யின் பிரபல பிரங்கி மெஹல் மதரஸாவின் மவுலானாவான காலீத் ரஷீத் பிரங்கி கூறும்போது, ‘‘இதுபோன்ற தவறான நடவடிக்கைகள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக தொடர்ந்து நடத்தப்படுகிறது. இதை பிரச்சினையாக்கி முஸ்லிம்கள் பெரிதுபடுத்தாமல் புறக்கணிப்பதே நல்லது’’ எனத் தெரிவித்தார்.
தாம் பிரதமர் நரேந்திர மோடியின் ஒரு தீவிர ஆதரவாளர் எனக்கூறிவரும் வசீம், தொலைக்காட்சிகளின் விவாதங்களில் பாஜகமற்றும் இந்துத்துவாவிற்கு ஆதரவாகப் பேசி வருகிறார்.
டெல்லியின் வரலாற்று சின்னமான ஹுமாயூன் சமாதியை இடித்து முஸ்லிம்களின் இடுகாடாக மாற்ற வேண்டும் எனவும், நாட்டின் மதரஸாக்களில் தீவிரவாதம் வளர்வதாகவும் கூறி ரிஜ்வீ சர்ச்சையை கிளப்பியது நினைவுகூரத்தக்கது.