

நாட்டின் ஐ.டி.துறை தலைநகரமாக உருவெடுத்ததால் கடந்த 15 ஆண்டுகளில் பெங்களூர் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை, தொழிற் சாலைகள், பன்னாட்டு நிறுவனங் கள் ஆகியவைகளின் காரணமாக குப்பையின் அளவும் அதிகரித் துள்ளது. பெங்களூரில் தினமும் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் டன் வரை குப்பைகள் உருவாகின்றன.
இந்தக் குப்பைகள் பெங்களூர் அருகே உள்ள மண்டூர் பகுதியில் கொட்டப்படுகின்றன. இதை எதிர்த்து அப்பகுதி மக்கள் கடந்த 5 ஆண்டு களாக பல்வேறு வகையான போராட் டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, பேராசிரியர் ஆல்பர்ட் ஸ்மித் கூறுகையில், "குப்பைகள் 15 ஆண்டுகளாக ஒரே இடத்தில் தேங்கிக் கிடப்பதால் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. மேலும் கழிவு நீர் பல நேரங்களில் குடிநீரில் கலப்ப தால் வாந்தி, மயக்கம், டைபாய்டு, மஞ்சள் காமாலை உள்ளிட்ட பல்வேறு நோய்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. இதை உடனடியாக தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
ஊரடங்கு உத்தரவு
குப்பையைக் கட்டுப்படுத்தத் தவறிய கர்நாடக அரசைக் கண் டித்து பலவிதமான போராட்டங்களில் ஈடுபட்ட 70 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். மேலும் தேங்கிக் கிடக்கும் குப்பை மலைகளைச் சுற்றி கடந்த செவ்வாய்க்கிழமை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அங்கு 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கர்நாடக முதல்வர் சித்தராமய்யா புதன்கிழமை மாலை மண்டூர் கிராம பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி னார். பெங்களூரில் உள்ள கிருஷ்ணா அரசு இல்லத்தில் நடைபெற்ற கூட்டத் தில் மண்டூர் கிராம பிரதிநிதிகள் அமைச்சர் ராமலிங்க ரெட்டி, மேயர் சத்தியநாராயணா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அப்போது, "குப்பை பிரச்சினைக்கு இன்னும் 4 மாதங்களில் தீர்வு காணப் படும். மண்டூரை சுற்றியுள்ள 10 கிராமங்களுக்கு சுகாதார வசதிகள் செய்யப்படும். தவறினால் பெங்களூர் மாநகராட்சி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குப்பைகளை கொட்டுவதற்கு மாற்று இடங்களை உடனடியாகக் கண்டறிய வேண்டும். அதுவரை மண்டூர்வாசிகள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்றார்.
தமிழக உதவியை பெற முடிவு
இதுகுறித்து பெங்களூர் மேயர் சத்திய நாராயணா, 'தி இந்து'விடம் கூறுகையில், "சேலம், நாமக்கல்லில் இருக்கும் திடக்கழிவு மேலாண்மை அமைப்பின் உதவியுடன், இங்கு 12 இடங்களில் திடக்கழிவு மேலாண்மை மையங்களை அமைக்க உள்ளோம்.
இதற்காக புறநகர் பகுதியில் 12 இடங்களில் 10 முதல் 18 ஏக்கர் நிலத்தை அரசு வழங்கும். இங்கு தினமும் சுமார் 5 ஆயிரம் டன் குப்பைகள் அழிக்கப்படும். மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள குப்பைகளை உலர்ந்த குப்பைகள், ஈர குப்பைகள் எனப் பிரித்து மாநகராட்சிக்கு கொடுக்க வேண்டும். இதன்மூலம் ஈரமானக் குப்பைகளை விவசாயத்திற்கு உரமாக பயன்படுத்தவும், உலர்ந்த குப்பைகள் மூலம் மின்சாரமும் உற்பத்தி செய்ய முடியும்" என்றார்.