

மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டுவந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் நாட்டில் ஏன் இன்னும் ஊழல் ஒழியவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு, நவம்பர் 8-ம் தேதி இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை நாட்டில் கொண்டுவந்தார். நாட்டில் ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என திடீரென அறிவித்த பிரதமர் மோடி, அடுத்த 50 நாட்களில் நாட்டில் ஊழல், தீவிரவாதம், கள்ளநோட்டு ஒழிக்கப்படும் என்று உறுதியளித்தார்.
ரூ.1000, ரூ.500 நோட்டுகளுக்குப் பதிலாக ரூ.2000, ரூ.200 நோட்டுகளும் புழக்கத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் கள்ள நோட்டுகள் ஏதும் ரிசர்வ் வங்கிக்கு வரவில்லை. தடை செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகள் எண்ணிக்கையும் 99 சதவீதம் சரியாக இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது மக்கள் வங்கியில் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுக்க முடியாமல் வங்கி முன் நீண்ட வரிசையில் காத்துக் கிடந்தனர். வெயிலிலும், மழையிலும் நீண்ட வரிசையில் காத்திருக்க முடியாமல் பலர் வரிசையில் நிற்கும்போதே உயிரிழந்த சம்பவங்களும் நடந்தன.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் லட்சக்கணக்கான சிறு, குறு தொழில்கள் முதலீடு இல்லாமல் நசிந்து போயின. ஏராளமான மக்கள் வேலையிழந்தனர். சாமானிய மக்கள், நடுத்தர மக்களின் வாழ்க்கையில் பண மதிப்பிழப்பு பெரும் சோகத்தையும், சொல்ல முடியாத வேதனைகளையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவரப்பட்டு இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து காங்கிரஸ் கட்சி கடுமையாக மத்திய அரசைச் சாடியுள்ளது
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “பண மதிப்பிழப்பு நடவடிக்கை வெற்றியாக இருந்திருந்தால், ஏன் நாட்டில் இன்னும் ஊழல் முடிவுக்கு வரவில்லை. ஏன் கறுப்புப் பணம் நாட்டிற்குள் கொண்டுவரப்படவில்லை. ஏன் இன்னும் பணமற்ற பொருளாதாரமாக மாறவில்லை? தீவிரவாதம் இன்னும் ஏன் ஒழிக்கப்படவில்லை. பணவீக்கம் ஏன் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை” பண மதிப்பிழப்பு பேரழிவு என்ற ஹேஷ்டேக் வைத்துப் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி இன்று அளித்த பேட்டியில் கூறுகையில், “ பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவரப்பட்டு இன்றுடன் 5 ஆண்டுகள் முடிகின்றன. துக்ளக் பிரதமர் கடந்த 2016-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவால் கறுப்புப் பணம், ஊழல், தீவிரவாதம் முடிவுக்கு வரும் என்று தெரிவித்தார். ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக பிரதமர் மோடி கூறிய எந்த அம்சத்திலும் ஒன்றுகூட அடையவில்லை. பணப் புழக்கம் அதிகரித்துள்ளது, ஊழல் அதிகரித்துள்ளது, தீவிரவாதச் செயல்களுக்குப் பணம் செல்கிறது. 2016-ம் ஆண்டுக்கு முன்பு இருந்த சூழல் நிலவுகிறது. எந்த அம்சம் நிறைவேற்றப்பட்டுள்ளது, எது நிறைவேற்றப்படவில்லை என்பது குறித்து பிரதமர் மோடி தேசத்துக்கு விளக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்