கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவில் 9.50 லட்சம் பேர் தற்கொலை; விவசாயிகள் தற்கொலை 139% அதிகரிப்பு: மத்திய அரசு மீது காங்கிரஸ் சாடல்

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா | கோப்புப் படம்.
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா | கோப்புப் படம்.
Updated on
2 min read

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபின் கடந்த 7 ஆண்டுகளில் நாட்டில் 9.50 லட்சத்துக்கும் அதிகமானோர் தற்கொலை செய்துள்ளனர். விவசாயிகள் தற்கொலை 139 சதவீதம் அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு மீது காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (என்சிஆர்பி) அறிக்கையில் 2014- 2020ஆம் ஆண்டுவரை இந்தியாவில் தற்கொலை செய்துகொண்டோர் எண்ணிக்கை 9 லட்சத்து 58 ஆயிரத்து 275 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

''என்சிஆர்பி அறிக்கையின்படி 2014 முதல் 2020ஆம் ஆண்டுவரை நாட்டில் 9.50 லட்சத்துக்கும் அதிகமானோர் தற்கொலை செய்துள்ளனர். இதில் மாணவர்கள் தற்கொலை 55 சதவீதம் அதிகரித்துள்ளது. வேலையில்லாத இளைஞர்கள் தற்கொலை 58 சதவீதமும், விவசாயிகள் தற்கொலை 139 சதவீதமும் அதிகரித்துள்ளது.

கூலித் தொழிலாளர்கள், விவசாயக் கூலிகள், தொழிலாளர்கள் தற்கொலை 16 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவை முன்னெப்போதும் இல்லாத சோகம் அழித்துவருவதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. மத்திய அரசின் அக்கறையின்மை, உணர்வற்ற நிலையால் நம்பிக்கையிழந்த மகிழ்ச்சியற்ற மக்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர்.

நாட்டுக்கு அன்னத்தை வழங்கும் விவசாயிகள், தொழிலாளர்கள், தினக்கூலிகள், குடும்பப் பெண்கள், படித்த வேலை கிடைக்காத இளைஞர்கள் நாடு முழுவதும் நம்பியக்கையற்று இருக்கிறார்கள். வாழ்க்கையில் சாதிக்க நினைக்க ஆசைப்படும் இளைஞர்களுக்கு வாய்ப்புகள் அனைத்தும் மன அழுத்தத்தால் தற்கொலைக்கான சூழலாக மாற்றப்படுகின்றன.

தோல்வியுற்ற மக்கள் விரோதக் கொள்கைகளை மூடி மறைக்கும் முயற்சியாக மக்களிடையே பிரித்தாளுதல், எதிர்மறை, நம்பிக்கையின்மை ஆகியவற்றை மத்திய அரசு நிலைநிறுத்த முயல்கிறது. என்சிஆர்பி புள்ளிவிவரங்கள், மக்களுக்கான உலகக்தை மோடி அரசின் எமலோகத்தைச் சித்தரிக்கிறது.

கடந்த 7 ஆண்டுகளாக மத்திய அரசு முதலாளிகளுக்கு ஆதரவாக கைகோத்துச் செயல்பட்டு, விவசாயிகளுக்கு எதிராகச் செயல்பட்டதால், விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டனர். மோடி அரசில் இதுவரை 78,303 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர், இதில் 35,122 பேர் விவசாயக் கூலிகள்.
கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டில் தற்கொலை எண்ணிக்கை 19 சதவீதம் அதிகரித்துள்ளது.

விவசாயத்தில் உள்ளீட்டுச் செலவு அதிகரிப்பு, ஆதரவு விலைக் குறைவு, பயிர்க் காப்பீடு திட்டத்தில் தனியார் நிறுவனங்கள் அதிகமாகப் பலன் பெறுதல், இறுதியாக கறுப்பு வேளாண் சட்டங்கள் போன்றவற்றால், விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டனர்

மாணவர்களும், இளைஞர்களும் தற்கொலை செய்வது அதிகரித்துள்ளது. இந்தியாவின் எதிர்காலம் இருள் சூழ்ந்து வருகிறது. மோடியின்7 ஆண்டு கால ஆட்சியில் 69 ஆயிரத்து 407 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.

ஆக்ஸ்ஃபாம் அறிக்கையில், 12 கோடி இந்தியர்கள் வேலையை இழந்துள்ள நிலையில், 100 இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து 13 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது''.

இவ்வாறு சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in