

நாய் செத்தால்கூட இரங்கல் தெரிவிக்கும் டெல்லியில் உள்ள பாஜக தலைவர்கள், வேளாண் சட்டங்களுக்கு எதிரானப் போராட்டத்தில் 600 விவசாயிகள் உயிரிழந்தநிலையில் ஒரு வாரத்தை கூட வருத்தம் தெரிவிக்கவில்லை என்று மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக் மத்திய அரசையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஜெய்ப்பூரில் ஜாட் சமூகத்தினர் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் நேற்று மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
டெல்லியில் உள்ள பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் ஒரு நாய் செத்தால்கூட இரங்கல் செய்தி விடுக்கிறார்கள். ஆனால், மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் 600 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர் ஆனால், அவர்களுக்கு ஒரு வார்த்தைகூட இரங்கல் செய்தி தரவில்லை. சீக்கியர்களை மத்திய அரசு பகைத்துக்கொள்ளக் கூடாது.
விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய அ ரசிலும் அமைச்சர்கள் இருக்கிறார்கள், ஆனால், ஒரு சிலர்தான் அகங்காரம் பிடித்து இருக்கிறார்கள்.
நான் இப்படிப் பேசுவதால், என்னுடைய பதவி பறிபோகும் என்பது குறித்தும், ஆளுநர் பதவியிலிருந்து இறக்கப்படுவேன் என்பது குறித்தும் எனக்கு கவலையில்லை. எப்போது என்னை பதவியிலிருந்து இறங்கக் கூறினாலும் நான் ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன். டெல்லியில் போராடும் விவசாயிகள் வெறும் கைகளோடு வரமாட்டார்கள், வெற்றியுடனே வர விரும்புவார்கள்.
கடந்த குடியரசுத் தினத்தன்று டெல்லியில் நடந்த வன்முறையில் செங்கோட்டையில் விவசாயிகள் சார்பில் கொடி ஏற்றப்பட்டது. பிரதமருக்கு அடுத்தபடியாக கோட்டையில் ஜாட் சமூகத்தினர், சீக்கியர்கள் மட்டும்தான் கொடியேற்றியுள்ளனர்.
விவசாயிகளின் மகன்கள்தான் ராணுவத்தில் பணியாற்றுகிறார்கள். தங்கள் பெற்றோர் டெல்லியில் போராடுவதைப் பார்த்து வேதனைப்படுகிறார்கள், ஏதாவது அநீதி நடக்கும்போது, இதற்கு எதிர்வினை வரும். விவசாயிகளுக்கு எதிராக பாஜக தலைவர்கள் செயல்படுவதால் ஹரியானா முதல்வர் கட்டார் தனது ஹெலிகாப்டரை மாநிலத்தில் எந்த கிராமத்திலும் தரையிறக்க முடியாது.
டெல்லியில் மத்திய விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்குப் பதிலாக, உலகத்தரம் வாய்ந்த சிறந்த கல்லூரியை கட்டலாம். தற்போது நம் நாட்டில் தரமான கல்விக்குத்தான் தேவை இருக்கிறது.
இவ்வாறு சத்யபால் மாலிக் தெரிவித்தார்.