

பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது கரன்சி பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி புழக்கத்தில் இருந்த ரூ. 1,000 மற்றும் ரூ. 500 நோட்டுகளை செல்லாது என அறிவித்தார். கருப்புப் பண புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும், டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் அப்போது தெரிவித்தார்.
அந்த சமயத்தில் கடன் அட்டை, டெபிட் கார்டு, செயலி மூலமான பண பரிவர்த்தனை உள்ளிட்ட மின்னணு பண பரிமாற்றம் நடைபெற்றது. இது வரும் காலங்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2019 இறுதியில் சீனாவில் பரவிய கரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு நடவடிக்கை போன்றவற்றால் மக்கள் மீண்டும் கரன்சி பரிவர்த்தனைக்கு அதிக அளவில் மாறியதோடு, ரொக்கக் கையிருப்பு அதிகம்வைத்துக்கொள்ளத் தொடங்கினர். இதனால் கரன்சி உபயோகம் அதிகரித்துள்ளது.
இந்த காலகட்டத்தில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்தது. அதேசமயம் பண உபயோகமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் முன்பு இருந்ததைக் காட்டிலும் இப்போது டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது.
2016-ம் ஆண்ட நவம்பர் 4-ம் தேதி நிலவரப்படி நாட்டில் ரூ.17.74 லட்சம் கோடி மதிப்பிலான கரன்சி புழக்கத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. அது தற்போது அக்டோபர் 29-ம் தேதி 2021 நிலவரப்படி ரூ. 29.17 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
அக்டோபர் மாதத்தில் மட்டும்ரூ. 2,28,963 கோடி நோட்டுகள் அதிகஅளவில் புழக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30-ம் தேதி ரூ. 26.88 லட்சம் கோடி புழக்கத்தில் இருந்தது. ஆண்டுதோறும் ரூ. 4,57,059 கோடி அதிகரித்துள்ளது. 2019-ம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் ரூ. 2,84,451 கோடி கரன்சி புழக்கம் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ரூபாய் மதிப்பு 16.8 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம் கரன்சிகளின் எண்ணிக்கை 7.2 சதவீதம் அதிகரித்துள்ளது. கரோனா பரவல் காரணமாக மக்கள் முன்னெச்சரிக்கையாக அதிக அளவில் ரொக்ககையிருப்பை வைத்துக் கொண்டதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
கடந்த நாடாளுமன்ற கூட்டத்தில், கரன்சி நோட்டுகளின் புழக்கமானது பெரும்பாலும் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சி,பணவீக்கம் மற்றும் பழைய நோட்டுகளுக்கு மாற்றாக அச்சடிக்கப் படுவதாக தெரிவித்தது. கரோனா பாதித்த 2020-21-ம் நிதி ஆண்டிலும் இந்தியாவின் ஜிடிபி கணிசமாக முன்னேற்றமடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் வர்த்தக முறையான யுபிஐ 2016-ம் ஆண்டு உருவாக்கப் பட்டது. இதை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மாதந்தோறும் அதிகரித்து வருகிறது. அக்டோபர் மாதத்தில் மட்டும் ரூ. 7.71 லட்சம் கோடி மதிப்பிலான பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 421 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.