

உலகின் பிரபல தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 3-வது முறையாக முதலிடம் பிடித்துள்ளார்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல கருத்துக் கணிப்பு நிறுவனமான ‘மார்னிங் கன்சல்ட்’ நிறுவனம் உலக தலைவர்களின் தலைமை குறித்து அவ்வப்போது கணக்கெடுப்பு நடத்தி அறிக்கை வெளியிட்டு வருகிறது.
இதன்படி அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி,கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென்கொரியா, பிரேசில், இந்தியா, மெக்ஸிகோஆகிய 13 நாடுகளின் மக்களிடம் அண்மையில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். இந்தியாவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 70 சதவீதம் பேர் அவரது தலைமையை அங்கீகரித்து ஆதரவு அளித்துள்ளனர். 24 சதவீதம் பேர் மட்டும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
‘மார்னிங் கன்சல்ட்’ நிறுவனம், இந்த ஆண்டில் இதுவரை 3 முறை கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது. இந்த 3 கருத்துக் கணிப்புகளிலும் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுத்து மெக்ஸிகோ அதிபர் லோபஸ் ஒபரடோர் 66 சதவீத வாக்குகளை பெற்று 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இத்தாலி பிரதமர் மரியோ திராகி (58%), ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் (54%), ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட்மோரிசன் (47%), அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (44%), கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (43%), ஜப்பான் பிரதமர் புமியோ கிஷாடா (42%), தென்கொரிய அதிபர் மூன் ஜோ-இன் (41%), பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் (40%),ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்(37%), பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் (36%), பிரேசில் அதிபர் ஜேர்போல்சோனரோ (35%) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளனர்.
கடந்த கருத்துக் கணிப்புகளைவிட அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் பின்தங்கியுள்ளனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி மட்டும் தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்து வருகிறார்.
இதுகுறித்து திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “இந்தியாவின் பிரதமராகநரேந்திர மோடி பதவி வகிப்பதில் அனைத்து இந்தியர்களும் பெருமிதம் கொள்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கத்தார் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வை, தீர்க்கமான தலைமைக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.