

தென் மண்டல கவுன்சிலின் 29-வதுகூட்டம் கடந்த மார்ச் மாதம்நடைபெறுவதாக திட்டமிடப்பட்டது. ஆனால், கரோனா வைரஸ்பரவல் 2-வது அலை காரணமாகஅந்தக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், தென் மண்டல கவுன்சிலின் கூட்டம் திருப்பதியில் இந்த மாதம் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் தென் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்கின்றனர். வரும் 14-ம் தேதி நடைபெறும் கூட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை வகிக்கிறார்.
இந்நிலையில், தென் மண்டல கவுன்சிலின் கூட்டத்தை முன்னிட்டு வரும் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி.க்கள் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் கூறும்போது, ‘‘எந்த பரிந்துரை கடிதங்களும் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை ஏற்கப்பட மாட்டாது. எனவே, அதற்கேற்ப பக்தர்கள் தங்கள் தரிசன ஏற்பாட்டைசெய்து கொள்ள கேட்டுக் கொள்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக திருப்பதி எம்.பி. எம்.குருமூர்த்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வருகை கணிசமாக குறைந்துள்ளதால் பல துறைகள் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. எனவே, பொருளாதாரம் மேம்பட பக்தர்கள் வருகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசின் பல்வேறு துறைகளும், தனியார் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அவர்களின் கோரிக்கைகளை தேவஸ்தான் அறங்காவலர் தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டியின் கவனத்துக்கு கொண்டு செல்வ தாக எம்.பி. குருமூர்த்தி உறுதி அளித்தார்.