

தீபாவளியில் ஏற்றப்பட்ட அயோத்தி விளக்குகளிருந்து பொதுமக்கள் எண்ணெய் வழித்து எடுத்துச் சென்றுள்ளனர். இக்காட்சிகளின் பதிவு சமூகவலைதளங்களில் வெளியாகி பாஜக அரசு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
உத்தரப்பிரதேசம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. தீபாவளியின் பின்னணியில் இங்கு14 வருட வனவாசத்திற்கு பின் பட்டாபிஷேகம் செய்த ராமர் காரணமாக உள்ளார்.
இதனால், பாஜக ஆளும் உ.பி. அரசு தீபாவளி அன்று அயோத்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. கடந்த வருடம் சுமார் ஏழரை லட்சம் தீபங்களை ஏற்றி முதன்முறையாக உலக சாதனையும் படைக்கப்பட்டது.
இந்த வருடம் முன்பை விட அதிகமாக சுமார் 12 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டன. இதை, பிரதமர் நரேந்தரமோடி, ’விளக்குகளின் ஒளியால் அயோத்தி தனது மகிமையை மீட்டுள்ளது’ என உ.பி அரசைப் பாராட்டியிருந்தார்.
இவ்விளக்குகள், வட மாநிலங்களில் சமையலுக்கு அதிகம் பயன்படுத்தும் கடுகு எண்ணெயில் ஏற்றப்படுகின்றன. இதனால், அயோத்திவாசிகள் திரண்டு எரியும் விளக்குகளை அணைத்து, அதிலிருந்து கடுகு எண்ணெயை வீட்டிற்கு எடுத்துச் சென்றிருப்பது தெரிந்துள்ளது.
இந்த காட்சிகள் வீடியோவில் பதிவாகி சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதன் மீது மத்திய, மாநில அரசுகள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இது குறித்து உ.பி.யில் ஓய்வுபெற்ற முதன்மை செயலாளரான சூர்ய பிரதாப்சிங் தனது ட்விட்டரில் இட்ட பதில், ‘30 சதவிகிதம் பேருக்கு உ.பி.யில் அன்றாடம் ரொட்டி கிடைப்பதில்லை.
இச்சூழலில் தீபாவளியில் தீபங்களை அயோத்தியில் ஏற்றி ஏழைகளை புண்படுத்தி விட்டது உ.பி. அரசு. சுமார் 36,000 லிட்டர் கடுகு எண்ணெய் 12 லட்சம் விளக்குகளில் ஊற்றப்பட்டுள்ளது.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதில், பிரதாப்சிங் மேலும் குறிப்பிடுகையில், ’கடந்த 2017 இல் முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவி ஏற்ற போது கடுகு எண்ணெயின் விலை லிட்டருக்கு ரூ.75 என்றிருந்தது.’ இது தற்போது, ரூ.200 முதல் 265 வரையில் விற்கப்படுகிறது.
இந்த எண்ணெய் அரசு அதிகாரிகளின் ஊழலால் கலப்படம் செய்யப்பட்டதாக இருக்கலாம். எனவே, இந்த எண்ணெயை எடுத்துச் சென்றவர்கள் அதை பயன்படுத்துவதற்கு முன் சமையலுக்கு உகந்ததா? என பார்த்துகொள்ளவும்.’ எனவும் எச்சரித்துள்ளார்.
இதுபோல், பல்வேறு கடுமையான விமர்சனங்கள் முதல்வர் யோகி அரசை எதிர்த்து ட்விட்டரில் பதிவாகி வருகின்றன. இத்துடன் அயோத்தி விளக்குகளில் எண்ணெய் எடுத்துச் செல்லும் வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது.