

தென் மாநிலங்களின் முதல்வர் களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 14-ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.
ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு அமித் ஷா 14-ம் தேதி வருகை தருகிறார். இதன் ஒரு பகுதியாக, தென் மாநிலங்களை ஆளும் முதல்வர்களை அவர் சந்தித்து பேசவுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, கேரளா,கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்கவுள்ளனர். இதுதவிர, அந்தமான் - நிகோபார், லட்சத்தீவுகளின் நிர்வாகிகளும், புதுச்சேரி துணைநிலை ஆளுநரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
மத்திய – மாநில அரசுகளின் மக்கள் நலத் திட்டங்கள், கொள்கை முடிவுகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி, சில விவகாரங்களில் மத்திய – மாநில அரசுகளுக்கு இடையேயான முரண்பாடுகள் குறித்தும் இதில் விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு, மத்திய அரசின் நதி இணைப்பு திட்டங்கள் ஆகியவையும் இந்தப் பேச்சுவார்த்தையில் முக்கிய இடம்பிடிக்கும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரம் குறித்து அமித் ஷாவிடம் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேசுவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.