Published : 20 Mar 2016 09:19 AM
Last Updated : 20 Mar 2016 09:19 AM

‘வாக்காளருக்கு பண பட்டுவாடா செய்வது தடுக்கப்படும்’: சுயேச்சைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை - அரசியல் கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் கருத்து கேட்பு

வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒருங்கிணைத்து எண்ணும் ‘டோட்டலைஸர்’ முறையை இந்தத் தேர்தலில் அறிமுகப்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. மேலும், சுயேச்சை வேட்பாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த டெபாசிட் தொகையை அதிகரிப்பது குறித்து அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்கப்பட்டது.

தமிழகம், புதுச்சேரி, கேரளம், அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளத்தில் மே 16-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேற்குவங்கத்தில் ஏப்ரல் 4-ம் தேதி தொடங்கி மே 5 வரை 6 கட்டங்களாகவும், அசாமில் ஏப்ரல் 4, 11 என 2 கட்டங்களாகவும் தேர்தல் நடக்கிறது. 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை மே 19-ம் தேதி நடக்கிறது.

தேர்தல் நடக்கும் மாநிலங் களின் அரசியல் கட்சி பிரதிநிதி களுடன் தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி டெல்லி யில் நேற்று ஆலோசனை நடத்தி னார். தேர்தல் ஆணைய அலுவல கத்தில் காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம், பிற்பகல் 2.30 மணிக்கு முடிவடைந்தது.

20 கட்சிகள் பங்கேற்பு

இதில் 20-க்கும் அதிகமான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை (அதிமுக), டிகேஎஸ் இளங்கோவன் (திமுக), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்), முன்னாள் மத்திய அமைச்சர் வேலு (பாமக) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தத் தேர்தலில் வாக்கு எண் ணிக்கையின்போது 2 முதல் 4 இயந்திரங்களை ஒன்றிணைத்து வாக்குகளை எண்ணும் ‘டோட் டலைஸர்’ முறையை அறிமுகப் படுத்த உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்தார். இதை பெரும்பாலான அரசியல் கட்சிகள் வரவேற்றன. சுயேச்சை வேட்பாளர்களின் எண்ணிக்கையை குறைக்க வேட்புமனு கட்டணத்தை அதிகரிக்கலாமா என்பது குறித்தும் கருத்து கேட்கப்பட்டது. வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேரத்தில் சமூக வலைதளம், ஊடகங்களில் பிரச்சாரம் செய்வதை தடுப்பது, வேட்புமனு தாக்கல் செய்பவர்கள், அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை பாக்கி வைத்துள்ளார்களா என்பதை அறிய தடையில்லா சான்றிதழ் வாங்கச் சொல்வது உள்ளிட்ட 7 பிரதான விஷயங்கள் குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துகளை தலைமை தேர்தல் ஆணையர் கேட்டறிந் தார்.

கூட்டத்தில் தெரிவித்த கருத்துகள் குறித்து தமிழக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கூறியதாவது:

டிகேஎஸ் இளங்கோவன் (திமுக): பணப் பட்டுவாடாவை தடுப்பது, பரிசுப் பொருட்கள் வழங்கு வதை கண்டறிந்து நிறுத்துவது போன்ற விஷயங்களை வலியுறுத் தினோம். வாக்கு எண்ணிக் கையின்போது 2, 3 இயந்திரங்களை இணைத்து வாக்குகளை எண்ணும் முடிவை திமுக சார்பில் வரவேற் றேன். பூத் சிலிப் விநியோகம் கட்டாயம், சொத்து மதிப்பு தாக்கல் செய்யும்போது, அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை ஏதாவது பாக்கியுள்ளதா என்பதற்கு தடையில்லா சான்றிதழ் வாங்குவது போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தேன்.

டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்): வாக்கு எண்ணிக்கையில் ‘டோட்ட லைஸர்’ முறையை வரவேற்றேன். ஆனால், ஒருவர் செலுத்தும் வாக்கு, சம்பந்தப்பட்ட வேட்பாளருக்கு சரியாக விழுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினேன். சுயேச்சைகள் அதிக அளவில் போட்டியிடுவதைத் தடுக்க வேட்புமனுவுக்கான கட்ட ணத்தை அதிகப்படுத்தலாமா என்று தலைமை தேர்தல் ஆணையர் கேட்டார். அதற்கு மறுப்பு தெரிவித்தேன்.

வேலு (பாமக): ‘டோட்டலைஸர்’ முறையை வரவேற்றேன். தேர்தலில் எல்லா கட்சியும் சமம் என்ற நிலையை உருவாக்க, மத்திய அரசே தேர்தலுக்காக ஒரு நிதி மையத்தை ஏற்படுத்த வேண்டும். பிரச்சாரம் ஓய்ந்த பிறகும் சமூக வலைதளங்கள், ஊடகங்களில் பிரச்சாரம் மேற்கொள்வதை தடுக்க வேண்டும் என்று கூறினேன்.

இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.

ஆலோசனை கூட்டம் தொடர் பாக நிருபர்களிடம் தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி கூறும்போது, ‘‘தேர்தலை சுமுகமாக நடத்துவது தொடர்பாக 5 மாநில அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தேர்தல் ஆணைய குழுவுடன் விரைவில் தமிழகம் வருவேன். பணப் பட்டுவாடாவை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x