

கர்நாடக இடைத்தேர்தலில் முதல்வர் பசவராஜ் பொம்மையின் சொந்த மாவட்டத்தில் பாஜக தோல்வி அடைந்ததால், கட்சி மேலிடம் அவர் மீது அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடகாவில் சிந்தகி, ஹனகல் ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் சிந்தகியில் ஆளும் பாஜகவும் ஹனகலில் காங்கிரஸும் வெற்றி பெற்றுள்ளன. 2 தொகுதிகளிலும் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்திய மஜத இரண்டிலும் தோல்வி அடைந்தது.
இத்தேர்தலில் முதல்வர் பசவராஜ் பொம்மையின் சொந்த மாவட்டத்தில் உள்ள ஹனகலில் பாஜக தோற்றதால் அக்கட்சியினரும் மேலிடத் தலைவர்களும் வருத்தம் அடைந்துள்ளனர். இந்நிலையில் பாஜகவின் தோல்வி ஆரம்பமாகி விட்டதாக முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறியதால், பசவராஜ் பொம்மைக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஹனகலில் தோற்றது குறித்து விளக்கம் அளிக்க டெல்லி வருமாறு அவருக்கு கட்சி மேலிடம் அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனால் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் பாஜகவுக்கு புத்துயிரூட்ட மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போவதாக எடியூரப்பா அறிவித்துள்ளார். அதேபோல அவரது மகன் விஜயேந்திராவும் வட கர்நாடகாவில் பாஜகவை வளர்க்க வேண்டிய தேவை எழுந்துள்ளது என கூறியுள்ளார்.
லிங்காயத் அதிருப்தி
இதனிடையே கர்நாடக அரசியல்விமர்சகர்கள், “எடியூரப்பாவை போல முதல்வர் பசவராஜ் லிங்காயத்து தலைவராக இருப்பினும், அந்த சமூகத்தினர் அவரை ஏற்கவில்லை. பாஜக மேலிடத்தால் எடியூரப்பா ஒதுக்கப்படுவதால் லிங்காயத்து சமூகத்தினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அதன் காரணமாகவே அவர்கள்பாஜகவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். மேலும் எடியூரப்பாவின் ஆதரவாளர்கள் பசவராஜ் பொம்மைக்கு எதிராக தேர்தலில் உள்ளடி வேலை பார்த்ததால் பாஜக தோல்வி அடைந்துள்ளது” என கருத்து தெரிவித்துள்ளனர்.