இலவச ரேஷன் திட்டத்தை இன்னும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்தது டெல்லி அரசு

இலவச ரேஷன் திட்டத்தை இன்னும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்தது டெல்லி அரசு
Updated on
1 min read

இலவச ரேஷன் திட்டத்தை இன்னும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

பணவீகம் உச்சத்தில் இருக்கிறது. இதனால் சாமான்ய மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர். இரண்டு வேளை உணவு சாப்பிடுவது கூட பலருக்கும் சிரமமானதாக ஆகியுள்ளது. கரோனாவால் பலரும் வேலையை இழந்துள்ளனர். எனவே அடுத்த 6 மாதங்களுக்காவது மக்களுக்கு இலவச ரேஷன் திட்டத்தை நீட்டிக்க வேண்டும் என்று பிரதமரிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். அதேவேளையில் டெல்லியில் அடுத்த ஆறு மாதங்களுக்கு இலவச ரேஷன் திட்டம் தொடரும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் ட்வீட் செய்திருக்கிறார்.

பிரதான் மந்த்ரி கரீப் கல்யான் அன்ன யோஜனா திட்டத்தின்கீழ் ரேஷனில் இலவசமாக வழங்கப்படும் கூடுதல் உணவு தானியம் வழங்கும் திட்டம் வரும் நவ.30 ஆம் தேதிக்குப் பின்னர் நீட்டிக்கும் பரிசீலனை இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு கரோனாவுக்குப் பிந்தைய பொருளாதார மீட்சிப் பாதையில் செல்வதால் பிரதான் மந்த்ரி கரீப் கல்யான் அன்ன யோஜனா என்ற திட்டத்தை மேலும் நீட்டிக்கும் எண்ணம் இல்லை என்று மத்திய உணவுத் துறை செயலர் சுதான்ஷு பாண்டே நேற்று கூறியிருந்த நிலையில் கேஜ்ரிவால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் ஹோலிப் பண்டிகை வரை பிரதான் மந்த்ரி கரீப் கல்யான் அன்ன யோஜனா திட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திட்டத்தின் நன்மைகள் என்ன?

கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் உள்ள ஏழை மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ‘பிரதான் மந்த்ரி கரீப் கல்யான் அன்ன யோஜனா ’ எனும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.

அதன்படி,இத்திட்டத்தின் வாயிலாக ரேசன் கடைகள் மூலமாக 80 கோடி பேருக்கு அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக,இத்திட்டத்தின் மூலம் மானிய விலை உணவு தானியத்துக்கு மேல், ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in