

டெல்லியில் கடும் காற்று மாசு ஏற்பட்டுள்ள நிலையில் அவசர நடவடிக்கையாக காற்று மாசை குறைக்க தண்ணீரை தெளிக்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முன்பைக் காட்டிலும் டெல்லியில் காற்று மாசின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. பனிக்காலங்களில் காற்றில் மாசுத் துகள்கள் தங்கிவிடுவதால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்குள்ளாகின்றனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிப்பதன் மூலம் மீண்டும் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது. ஏற்கெனவே வேளாண் அறுவைடைக்கு பிறகு விவசாயிகள் கழிவுகளை எரித்து வரும் நிலையில் தீபாவளி பட்டாசு காரணமாக காற்று மாற்று மேலும் அதிகரித்துள்ளது.
டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியம பகுதிகளிலும் இரண்டாவது நாளாக இன்றும் கடுமையான காற்று மாசு உருவாகியுள்ளது. இதனையடுத்து காற்று மாசை குறைக்க தண்ணீரை தெளிக்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் கூறியதாவது:
அவசர நடவடிக்கையாக, காற்று மாசுபாட்டைக் குறைக்க வாகனங்கள் உதவியுடன் தண்ணீரை தெளிக்க ஆரம்பித்துள்ளோம். இது தற்காலிக தீர்வு தான். விதிமுறைகளை மீறியதற்காக 92 கட்டுமான தளங்களுக்கும் தடை விதித்துள்ளோம். காற்றை மாசை குறைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.