ரிவர்ஸ் கியரில் வளர்ச்சி; விறகு அடுப்புக்கு மாறும் மக்கள்: ராகுல் காந்தி சாடல்

பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி | கோப்புப்படம்
பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி | கோப்புப்படம்
Updated on
1 min read

நாட்டில் தொடர்ந்து அதிகரித்துவரும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வால் லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்கள் மீண்டும் விறகு அடுப்பைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். மோடியின் வளர்ச்சி எந்திரம் ரிவர்ஸ் கியரில் செல்கிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

கடந்த 1-ம் தேதி முதல் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் கியாஸ் சிலிண்டர் விலை, ரூ.266 உயர்த்தப்பட்டு, ரூ.2000.50 ஆக அதிகரித்துள்ளது. வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டர் விலை, தற்போது ரூ.899.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. சிலிண்டர் விலை கடந்த ஓராண்டில் மட்டும் ஒரு மடங்கு அதிகரித்துள்ளது.

உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஏழைக் குடும்பங்களுக்கு மத்திய அரசு வழங்கிய இலவச கியாஸ் இணைப்பு, அடுப்பு, சிலிண்டர் ஆகியவற்றை விலை உயர்வால் மறுமுறை சிலிண்டர் வாங்க முடியாமல் ஏழைக் குடும்பத்தினர் தவித்து வருகிறார்கள். இதனால் மீண்டும் பழைய முறையான விறகு அடுப்புக்கு மாறிவருவதாக நாளேடுகளில் செய்தி வெளியானது.

இது தொடர்பாக கிராமப்புறங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் சிலிண்டர் விலை உயர்வு காரணமாக, 42 சதவீத மக்கள் சிலிண்டர் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு மீண்டும் பாரம்பரிய விறகு அடுப்புக்கு மாறிவிட்டதாகச் செய்தி வெளியானது. இந்த நாளேடு செய்தியை காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இதை காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல் காந்தியும் தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு மத்திய அரசைக் கடுமையாகச் சாடியுள்ளார். அதில், “வளர்ச்சி என்ற வார்த்தையிலிருந்து மத்திய அரசு வெகுதொலைவு விலகிச் சென்றுவிட்டது. லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்கள் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வால், மீண்டும் விறகு அடுப்புக்கு வலுக்கட்டாயமாகத் தள்ளப்பட்டனர். மோடியின் வளர்ச்சி வாகனம் ரிவர்ஸ் கியரில் செல்கிறது, பிரேக்கும் பிடிக்காமல் செயலிழந்துவிட்டது” என விமர்சித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in