சகோதர பாசத்தைப் பறைசாற்றும் பாய் தூஜ் பூஜை: பிரதமர் மோடி வாழ்த்து

சகோதர பாசத்தைப் பறைசாற்றும் பாய் தூஜ் பூஜை: பிரதமர் மோடி வாழ்த்து
Updated on
1 min read

சகோதர, சகோதரி பாசத்தைப் பறைசாற்றும் பாய் தூஜ் விழா இன்று நாடு முழுவதும் குறிப்பாக வட மாநிலங்களில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவு செய்துள்ள ட்வீட்டில், பாஜ் தூஜ் நன்னாளில் நான் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

எதற்காகக் கொண்டாடப்படுகிறது பாய் தூஜ்?

பாய் என்றால், இந்தி மொழியில் சகோதரன் என்று அர்த்தம். தூஜ் என்றால் பூஜை எனப் பொருள். சகோதரனின் நலனுக்காக சகோதரி செய்யும் பூஜை இது.

இந்துக்களின் பண்டிகையான இந்த தினத்தில், சகோதரி தமது, சகோதரனை சந்தித்தே ஆக வேண்டும் என்பது பாரம்பரியப் பழக்கவழக்கமாக உள்ளது. இந்த விழா வட மாநிலங்களில், தீபாவளித் திருநாளை அடுத்த வளர்பிறை இரண்டாம் நாளன்று கொண்டாடப்படுகிறது.

டெல்லி மற்றும் யமுனை நதிக்கரையை ஒட்டி வாழ்பவர்கள் இந்த நாளில் சகோதர - சகோதரிகளாக இணைந்து மதுராவின் யமுனை நதிக்கரையில் திரள்கின்றனர். சகோதரன் நீடூழி வாழ சகோதரிகள் பூஜை செய்கின்றனர். பதிலுக்கு சகோதரன், 'உன்னை எப்போதும் காப்பேன்' என உறுதி அளிப்பதோடு பரிசும் அளிப்பார்.

யமுனை அருகே இல்லாதவர்கள் சகோதரனின் வீட்டுக்கே போய், அவர்கள் நலனுக்காக பூஜை செய்து. ஆரத்தி எடுத்து, திலகமிட்டு விழுந்து வணங்குகின்றனர்.

இந்தப் பண்டிகை பௌ-பீஜ் (Bhau-beej), பாய் தூஜ் (Bhai Dooj), பாய் போட்டா (Bhai Phota) என்று பல்வேறு பெயர்களிலும் கொண்டாடப்படுகிறது.

ரக்‌ஷபந்தன் நாளைப் போன்றதுதான் இதுவும். ஆனால், பூஜை முறைகள் வேறு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in