Published : 06 Nov 2021 03:06 AM
Last Updated : 06 Nov 2021 03:06 AM

மணம் முடிக்காமல் சேர்ந்து வாழ்பவர்கள் குடும்ப நல நீதிமன்றத்தை நாட உரிமை இல்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

சட்டப்படி திருமணம் செய்யாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தவர்கள் தங்களுக்குள் எழும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண குடும்ப நலநீதிமன்றங்களை நாட எந்த சட்டப்பூர்வ உரிமையும் இல்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை இடையர்பாளையத்தை சேர்ந்தவர் ஆர்.கலைச்செல்வி. இவர் கோவை டி.கே.மார்க்கெட் பகுதியை சேர்ந்த ஜோசப் என்பவரின் மகன் ஜோசப்பேபியுடன் மோதிரம் மாற்றிக்கொண்டு திருமணம் செய்து கடந்த2013-ம் ஆண்டு முதல் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்ததாகவும், 2016-ம் ஆண்டு ஜோசப் பேபி தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டதாகவும், ஜோசப் பேபி தொழில் தொடங்க ஏராளமான பணத்தை செலவிட்டுள்ளதாகவும், எனவே ஜோசப் பேபியுடன் தன்னை சேர்த்து வைக்க வேண்டும் என்றும் கோரி கோவை நீதிமன்றத்தில் கலைச்செல்வி வழக்கு தொடர்ந்தார்.

‘திருமணம் நடக்கவில்லை’

ஆனால், ஏற்கெனவே திருமணமாகி கணவரைப் பிரிந்த இந்துமதத்தை சேர்ந்த கலைச்செல்விக்கும், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த தனக்கும் எந்த முறைப்படியும் சட்ட ரீதியாக திருமணம் நடைபெறவில்லை என்று கூறி ஜோசப் பேபியும் தனியாக மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த கோவை நீதிமன்றம் கலைச்செல்வி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

கோவை நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னைஉயர் நீதிமன்றத்தில் கலைச்செல்வி வழக்கு தொடர்ந்தார்.

நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், கலைச்செல்வியும், ஜோசப் பேபியும் எந்த மதப்படியும் சட்ட ரீதியாக திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்துள்ளனர். பணம் கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தவர்கள் தங்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண குடும்ப நல நீதிமன்றங்களை நாட எந்த சட்டப்பூர்வ உரிமையும் இல்லை.

இவ்வாறு கூறிய நீதிபதிகள்,கலைச்செல்வி தாக்கல் செய்தமனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x