

நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேற்று பட்ஜெட் தாக்கல் செய்து பேசுகையில், முதலீடு, வளர்ச்சி, விவசாயிகள், வேளாண்மை உட்பட பல சொற்களை பல முறை பயன்படுத்தினார்.
நாடாளுமன்ற மக்களவையில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி நேற்று பொது பட்ஜெட் தாக்கல் செய்தார். அவரது உரையில் முதலீடு என்ற வார்த்தையை 37 இடங்களில் பயன்படுத்தினார். ஆனால், கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இந்த வார்த்தையை அவர் 60 முறை பயன்படுத்தி இருந்தார்.
இதேபோல் வளர்ச்சி என்ற வார்த்தை பட்ஜெட்டில் 20 முறை இடம்பெற்றது. (கடந்த முறை 27 இடங்களில் பயன்படுத்தினார்.) விவசாயிகள் என்ற வார்த்தை 32 முறையும், வேளாண்மை என்ற வார்த்தை 24 முறையும் ஜேட்லி உரையில் இடம்பெற்றன.
கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம், வளர்ச்சி என்ற வார்த்தையை 32 முறை கூறினார். ஆனால், முதலீடு என்ற வார்த்தையை வெறும் 11 இடங்களில் மட்டுமே சிதம்பரம் குறிப்பிட்டிருந்தார்.
கிராமப்புற பகுதிகள் அல்லது பொருளாதாரம் பற்றி 25 முறைக்கு மேல் குறிப்பிட்டு ஜேட்லி நேற்று பேசினார். ஆனால், சிக்கல் என்ற வார்த்தையை ஒரே ஒரு இடத்தில் பட்ஜெட்டில் குறிப்பிட்டிருந்தார் ஜேட்லி. வாய்ப்புகள் என்ற வார்த்தையை 12 முறை குறிப் பிட்டார்.
‘சாதாரண மனிதன்’ என்ற வார்த்தை ஒரு முறையும், கருப்பு பணம் என்ற வார்த்தை 2 முறையும் வரி ஏய்ப்பு என்ற வார்த்தை பல முறையும் ஜேட்லி உரையில் இடம்பெற்றன. தவிர வேலை, திறன், இளைஞர், நிறுவனம், ஏழை, பற்றாக்குறை, சரிவு, பணவீக்கம் போன்ற வார்த்தைகள் கடந்த கால பட்ஜெட்களில் அதிகமாக இடம்பெற்றன. ஆனால், ஜேட்லி இந்த வார்த்தைகளை ஓரிரு இடங்களில் மட்டுமே தனது பட்ஜெட்டில் குறிப்பிட்டு பேசினார்.