

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் மருத்துவமனையைக் கைப்பற்றும் நோக்கில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பின்னர் அங்கு பாதுகாப்புப் படையினர் குவிந்த நிலையில் பொதுமக்களையே கேடயமாகப் பயன்படுத்தி தப்பி ஓடினர்.
ஜம்மு காஷ்மீரில் சமீப நாட்களாகவே பொதுமக்களை அதுவும் குறிப்பாக சாதாரண வியாபாரிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பெமினா எனுமிடத்தில் உள்ளது ஸ்கிம்ஸ் மருத்துவமனை. இந்த மருத்துவமனையைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அங்கு சில பகுதியில் தீ பற்றியபோது ஆரம்பத்தில் போலீஸார் இது தீ விபத்து என நினைத்தனர். பின்னர் தான் அது தீவிரவாதத் தாக்குதல் என உறுதியானது.
மருத்துவமனை அருகிலிருந்து தங்கும் விடுதிகளை பாதுகாப்புப் படையினர் உடனே தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்நிலையில் இந்தத் தாக்குதலில் ஒருவர் காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் 50 கம்பெனி பாதுகாப்புப் படை குவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் தான் உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீருக்கு 3 நாள் சுற்றுப்பயணம் சென்றுவந்தார். இந்நிலையில் அங்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.