சுப்ரதா முகர்ஜி மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு: மேற்குவங்க முதல்வர் மம்தா இரங்கல்

சுப்ரதா முகர்ஜி மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு: மேற்குவங்க முதல்வர் மம்தா இரங்கல்
Updated on
1 min read

மேற்குவங்க மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும் கட்சியின் மூத்த தலைவருமான சுப்ரதா முகர்ஜியின் மறைவு தனக்கு தனிப்பட்ட இழப்பு என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தின் முன்னாள் பஞ்சாயத்து துறை அமைச்சராக இருந்தவர் சுப்ரதா முகர்ஜி. இவருக்கு வயது 75. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்ஜியோப்ளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு 9.22 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது. அவருக்கு மனைவி இருக்கிறார்.

சுப்ரதா அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்குச் சென்ற மம்தா பானர்ஜி அவரது மறைவை அறிவித்தார். பின்னர் அவர் கூறுகையில், சுப்ரதா முகர்ஜியின் மறைவை என்னால் நம்ப முடியவில்லை. அவர் கட்சிக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட செயல்வீரர். அவரது மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் பேரிழப்பு என்று கூறினார்.

அவரது சடலம், ரவீந்திர சதான் மைதானத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு பொதுமக்கள் மரியாதை செலுத்த வைக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து, அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

நாரதா வழக்கில் சிக்கியவர்:

மேற்கு வங்கத்தில் நாரதா இணையதளம் 2016 ஆம் ஆண்டு ஸ்டிங் ஆப்ரேஷன் நடத்தியது. அதில் போலி நிதி நிறுவனம் ஒன்றுக்கு திரிணமூல் காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் ஆதரவாக நடந்து கொள்வதற்குப் பணம் பெற்றனர். இந்தக் காட்சியை நாரதா நிறுவனம் ஸ்டிங் ஆப்ரேஷன் மூலம் வெளிக்கொண்டு வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ, திரிணமூல் காங்கிரஸ் அமைச்சர்கள் ஹக்கிம், சுப்ரதா முகர்ஜி உள்ளிட்ட 4 பேர் சிக்கினர். சுப்ரதா முகர்ஜி சிறை சென்று ஜாமீனில் வெளிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in