Last Updated : 04 Nov, 2021 01:07 PM

 

Published : 04 Nov 2021 01:07 PM
Last Updated : 04 Nov 2021 01:07 PM

உற்பத்தி வரி குறைப்பு வெற்று வார்த்தை; மோடி அரசுக்கு உண்மையின் கண்ணாடியை காட்டிய மக்கள்: காங்கிரஸ் கிண்டல்

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரிக் குறைப்பு செய்து மத்திய அரசு விடுத்த அறிவிப்பு வெற்று வார்த்தை. 2014ம் ஆண்டு இருந்ததுபோல் எப்போது விலை குறையும் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடரந்து உயர்ந்து வந்ததன் எதிரொலியாக பெட்ரோல், டீசல் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வந்தன. இதனால் பெட்ரோல் லிட்டர் 100ரூபாயை நாடுமுழுவதும் கடந்தது, டீசலும் லி்ட்டர் 100 ரூபாய்க்கும் மேல் பலமாநிலங்களில் உயர்ந்தது. இதனால் நடுத்தர மக்கள், சாமானிய மக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகினர். எதிர்க்கட்சிகளும் மத்திய அரசை கடுமையாக விமர்சிக்கத்தொடங்கின.

இதையடுத்து, பெட்ரோல் மீதான உற்பத்தி வரிசை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 10 ரூபாயும் குறைத்து நேற்று மத்திய அரசு அறிவித்தது இது இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. மத்திய அரசின் அறிவிப்பையடுத்து,பாஜக ஆளும் மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 குறைக்கப்பட்டுள்ளது.

ஆனால், சமீபத்தில் நடந்த 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், 3 மக்களவைத் தொகுதிகளுக்கும் நடந்த இடைத் தேர்தலில் பாஜகவுக்கு பயங்கரமான அடி கிடைத்து 14 தொகுதிகளில் தோற்றது.இதையடுத்து, பெட்ரோல், டீசல் வரியை குறைத்துள்ளதாக காங்கிரஸ் கட்சி கூறுகிறது.

காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைத்ததாக மத்திய அரசு கூறுவது வெற்று வார்த்தை. 2014ம் ஆண்டில் இருந்தது போன்று விலையைக் குறைக்க முடியுமா. அதற்கான காரணங்களைக் கூறுகிறோம்.

மத்திய அரசு பெட்ரோல் மீதான உற்பத்தி வரியாக லிட்டருக்கு ரூ.32.90 உயர்த்திவிட்டு, ரூ.5 மட்டும் குறைத்துள்ளது.டீசலில் லிட்டருக்கு ரூ.31.80 உயர்த்திவிட்டு, இப்போது ரூ.10 குறைத்துள்ளது.

காங்கிரஸ் கட்சி தலைமையில் ஐக்கிய முற்போக்குக்கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, பெட்ரோல் மீது உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ.9.48 பைசாவும், டீசல் லிட்டர் ரூ.3.56 பைசாவும் இருந்தது. ஆனால், வரி ஒட்டுண்ணி மோடி அரசுக்கு உண்மையின் கண்ணாடியை காட்டிய மக்களுக்குப் பாராட்டுக்கள். அதனால் விலை குறைந்துள்ளது.

நினைவில் கொள்ளுங்கள்…கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.71.41 ஆகவும், டீசல் விலை லிட்டர் ரூ.55.49ஆகவும் இருந்தது. அப்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்று 105.71 டாலராக இருந்தது.ஆனால், இன்று கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்று 82 டாலராக இருக்கிறது. 2014ம் ஆண்டுக்கு இணையாக எப்போது பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்.

காங்கிஸ் அரசில் பெட்ரோலுக்கு உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ.9.48ஆகவும், டீசலில் லிட்டருக்கு ரூ.3.56 ஆகவும் இருந்தது. தற்போது பெட்ரோல் மீது உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ.32.90லிருந்து, 5 ரூபாய் குறைக்கப்பட்டு ரூ.27ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.31.80லிருந்து, ரூ.10 குறைக்கப்பட்டு, ரூ.21.80ஆகவும் இருக்கிறது.

மோடிஜி, தேசத்துக்கு வெற்றுவார்த்தைகள் தேவையில்லை. கொடூரமான வரிஉயர்வை திரும்பப் பெறுங்கள்.

மோடிபொருளாதாரத்தின் வெற்றுவார்த்தைகளைப் பாருங்கள். 2021ம் ஆண்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.28ம், டீசலில் லிட்டருக்கு ரூ.26 உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், இடைத் தேர்தலில் 14 தொகுதிகளிலும், 2 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக தோல்வி அடைந்தவுடன் பெட்ரோல் ரூ.5, டீசல் விலையில் ரூ.10 குறைத்து தீபாவளிப் பரிசு என மார்தட்டிக் கொள்கிறார்கள்.
இவ்வாறு சுர்ஜேவாலா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x