மக்கள் பணம் ‘கப்ரிஸ்தானுக்கு’ செலவழிக்கப்படாது; கோயில்களை மறுகட்டமைக்கவே பாஜக அரசு பயன்படுத்தும்: ஆதித்யநாத் பேச்சு

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் | கோப்புப்படம்
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் | கோப்புப்படம்
Updated on
1 min read

மக்கள் பணம் முந்தைய அரசுகளால் கப்ரிஸ்தானுக்கு(சமாதி) செலவிடப்பட்டது. இனிமேல் மக்கள் பணத்தை பாஜக அரசு கோயில்களை மறுகட்டமைக்க பயன்படுத்தும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்

அயோத்தியில் நேற்று தீபங்கள் ஏற்றும் நிகழ்ச்சி அரசு சார்பில் நடந்தது. இதில் பங்கேற்ற முதல்வர் யோகி ஆதித்யநாத் அதில் பேசியதாவது:

மாநிலத்தில் இதற்கு முன் ஆண்ட அரசுகள் மக்களின் பணத்தை கப்ரிஸ்தானுக்காக (கல்லறைகள்) செலவிட்டன. ஆனால், பாஜக அரசு மக்களின் பணத்தை கோயில்களின் மறுகட்டமைப்புக்காக செலவிடுகிறது. கப்ரிஸ்தான் மீது அன்புள்ளவர்கள் மக்கள் பணத்தை அங்கு செலவிட்டார்கள், மதத்தின் மீதும் கலாச்சாரத்தின் மீது பற்றுள்ளவர்கள், மக்கள் வாழ்க்கையை உயர்த்த பயன்படுத்துவார்கள்.

பிரதமர் கரீப் கல்யான் யோஜனா திட்டத்தின் மூலம் ஏழைகள் இலவச ரேஷன் பொருட்கள் வழங்குவதை அடுத்த ஆண்டு ஹோலி பண்டிகை வரை உ.பி. அரசு நீட்டித்துள்ளது. பெருந்தொற்று இன்னும் முடியவில்லை என்பதால், ஏழைகளுக்கு இலவசமாக அரிசி, கோதுமை, சர்கக்ரை, பருப்பு, உப்பு, சமையல் எண்ணெய் வழங்கப்படும். இதன் மூலம் மாநிலத்தில் 15 கோடி மக்கள் பயன்பெறுவார்கள்.

மிகப்பெரிய அளவில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. மத்திய அரசின் பல்வேறு திட்டங்களும் உ.பி.யில் நடந்து வருகின்றன. ஏறக்குறைய 300 திட்டங்களின் பணிகள் அடுத்த 2 மாதங்களில் முடிக்கப்படும்.

இதற்கு முன் ஆட்சியில் இருந்த கட்சிகள், 30 ஆண்டுகளுக்கு முன் ஜெய் ஸ்ரீராம் என்று கூறினாலே குற்றமாகப் பார்த்தன. ஆனால், பிரதமர் மோடியின் ஆட்சியில் இறுதியாக ராமர் கோயிலுக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

இது ஜனநாயகத்தின் வலிமையையும், மக்களின் வலிமையையும் குறைக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன் உங்களை எதிர்த்தவர்கள், இன்று உங்கள் முன் உங்கள் வலிமையின் முன் பணிந்துவிட்டார்கள். ராமர் ஒவ்வொருவரையும் ஒன்று சேர்ப்பார், இதுதான் ராமரின் சக்தி. 2023ம் ஆண்டுக்குள் ராமர் கோயில் கட்டுமானம் முடிக்கப்படும், இதைத் தடுக்க உலகில் யாராலும் முடியாது.

இந்த உலகின் முன் அயோத்தி நகரம் கலாச்சார நகரமாக மாறிவிட்டது, அடுத்துவரும் நாட்களில் இன்னும் வளர்ச்சித்திட்டங்கள் வரும். உலகளவில் ஏராளமான சுற்றுலாப்பயணிகளை இந்த நகரம் ஈர்க்கும்.

இவ்வாறு ஆதித்யநாத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in