Published : 04 Nov 2021 11:14 AM
Last Updated : 04 Nov 2021 11:14 AM

உற்பத்தி வரி குறைப்பு எதிரொலி: பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் ரூ.12, டீசல் ரூ.17 வரை குறைப்பு

பிரதமர் மோடி | கோப்புப்படம்

பெங்களூரு


பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்ததன் எதிரொலியாக பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகபட்சமாக பெட்ரோலுக்கு லிட்டர் 12 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 17ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடரந்து உயர்ந்து வந்ததன் எதிரொலியாக பெட்ரோல், டீசல் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வந்தன. இதனால் பெட்ரோல் லிட்டர் 100ரூபாயை நாடுமுழுவதும் கடந்தது, டீசலும் லி்ட்டர் 100 ரூபாய்க்கும் மேல் பலமாநிலங்களில் உயர்ந்தது. இதனால் நடுத்தர மக்கள், சாமானிய மக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகினர். எதிர்க்கட்சிகளும் மத்திய அரசை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கின.

இதையடுத்து, பெட்ரோல் மீதான உற்பத்தி வரிசை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 10 ரூபாயும் குறைத்து நேற்று மத்திய அரசு அறிவித்தது இது இன்று முதல் நடைமுறைக்கும் வந்துள்ளது.

இந்த உற்பத்தி விலைக் குறைப்பால், டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.110.04 முதல் ரூ.105.04 ஆகக் குறையும், டீசல் லிட்டர் ரூ.98.42 லிருந்து ரூ.88.42 ஆகக் குறையும்.

கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் முதல் பெட்ரோல் மீது மத்திய அரசு உற்பத்தி வரியாக லிட்டருக்கு ரூ.38.78 உயர்த்தியது, தற்போது அதில் ரூ.5 குறைத்திருக்கிறது. டீசலில் லிட்டருக்கு ரூ.29.03 உயர்த்திவிட்டு ரூ.10 குறைத்துள்ளது.

மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியைக் குறைத்ததையடுத்து, பாஜக ஆளும் மாநிலங்களான உத்தரப்பிரதேசம், கோவா, அசாம், திரிபுரா, குஜராத், கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பு நுகர்வோருக்கு ஓரளவுக்கு நிம்மதி பெருமூச்சு விடவைத்துள்ளது.

கர்நாடகம்

கர்நாடகாவில் பெட்ரோல் விலை தற்போதுலிட்டர் ரூ.95.90 பைசாவும், டீசல் லி்ட்டர் ரூ.81.50 ஆகவும் விற்கப்படுகிறது. மத்திய அரசின் உற்பத்தி வரிக் குறைப்பின் எதிரொலியாக, பெட்ரோல் டீசல் இரண்டிலும் லிட்டருக்கு 7 ரூபாய் குறைக்கப்படும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

முதல்வர் பசவராஜ் பொம்மை ட்விட்டரில் பதிவி்ட்ட செய்தியில் “ நம்முடைய பிரதமர் மோடி தேசத்துக்கு மிகஅற்புதமான தீபாவளிப் பரிசாக பெட்ரோல், டீசல் மீதான விலைக் குறைத்து அறிவித்துள்ளார். இதன் எதிரொலியாக கர்நாடக அரசும் பெட்ரோல், டீசல் மீது லிட்டருக்கு 7 ரூபாய் குறைக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம்

உத்தரப்பிரதேசத்திலும் பெட்ரோல் லிட்டருக்கு வாட் வரி 7 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 2 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. மாநில தலைமைச் செயலாளர் நவ்நீத் சாஹல் கூறுகையில் “ பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு உற்பத்திவரியைக் குறைத்துள்ளது. இதன்பலனை மக்களுக்கு உ.பி. அரசு வழங்கும். இதன்படி, டீசல் லிட்டருக்கு வாட் வரியிலிருந்து 2 ரூபாயும், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.7 குறைக்கப்படுகிறது. இதனால் மாநிலத்தில் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு 12 ரூபாய் குறையும்” எனத் தெரிவித்துள்ளார்.

திரிபுரா

திரிபுரா மாநிலத்திலும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 குறைக்கப்பட்டுள்ளது. முதல் பிப்லப்குமார் தேவ் ட்விட்டரில் பதிவிட்ட அறிவிப்பில், “ பிரதமர் மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான வரியையும் திரிபுரா அரசு குறைக்கிறது. இதன்படி நாளை முதல் பெட்ரோல், டீசல் மீதான விலை லிட்டருக்கு 7 ரூபாய் குறைக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

அசாம் மாநிலம்

அசாம் மாநில அரசும் பெட்ரோல், டீசல் மீதான விைலக் குறைப்பை இன்று முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது. அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைத்துள்ளது. பிரதமர் மோடியின் முடிவுக்கு இணங்கி, அசாம் அரசும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை லிட்டருக்கு 7 ரூபாய் குறைக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

கோவாவில் அதிகபட்சம்

கோவா மாநிலத்தில் அதிகபட்சமாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.
கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் விடுத்த அறிவிப்பில், “ மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியைக் குறைத்துள்ளதால் நாங்களும் வாட் வரிையக் குறைக்கிறோம். இதன்படி கோவாவில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி ரூ.7 குறைக்கப்படுகிறது. இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 ரூபாயும், டீசல் விலை ரூ17ம் குறையும். இதுநாளை(இன்று) நடைமுறைக்கு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

குஜராத்

குஜராத்திலும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. குஜராத் முதல்வர் அலுவலகம் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ பெட்ரோல், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 7 ரூபாய் குறைக்கப்படுகிறது. இது உடனடியாக நடைமுறைக்கு வருகிறது” எனத் தெரிவித்துள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x