

நூறு ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட காசி அன்னபூரணி சிலை தற்போது மீட்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்திலேயே அந்த சிலை வைக்கப்படவுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள காசி என்று அழைக்கப்படும் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இங்கு விஸ்வநாதருடன், அன்னபூரணி தேவியும் எழுந்தருளி பக்தர் களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இந்தக் கோயிலில் இருந்து சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்புஅன்னபூரணி சிலை ஒன்றை கடத்தல்காரர்கள் கடத்தி வெளிநாட்டுக்கு கொண்டு சென்றுவிட்டனர்.
இந்நிலையில் அந்த சிலை கனடாவின் ஒட்டாவா நகரிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்த சிலையை அண்மையில் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினர் (ஏஎஸ்ஐ) பெற்றனர்.
இதுகுறித்து மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் ஜி. கிஷண் ரெட்டி நேற்று முன்தினம் கூறியதாவது:
இந்த சிலை கடந்த மாதம் 15-ம்தேதி இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த சிலையை மீட்டெடுத்து இந்தியாவுக்குக் கொண்டு வரப்படும் என்று பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் அறிவித்தார்.
இதன்படி, திருடப்பட்டு கடத்தப்பட்ட இந்த சிலை மீட்டெடுக்கப் பட்டு இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. 1913-ம் ஆண்டு இந்த சிலை கடத்தப்பட்டது. 1976-ம்ஆண்டு முதல் வெளிநாடு களுக்குக் கடத்தப்பட்ட 55 சிலைகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் 75 சதவீதம் 2014 முதல் 2021-ம்ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கொண்டு வரப்பட்டவை.
இந்த 55 சிலைகளில் 42 சிலைகள் 2014-ம் ஆண்டுக்குப் பிறகு கொண்டு வரப்பட்டவை. வரும் 11-ம் தேதி இந்த சிலை அலிகர் நகருக்கும், பின்னர் நவம்பர் 14-ல்கன்னவுஜ், அயோத்யாவுக்கும், 15-ல் வாரணாசிக்கும் கொண்டு வரப்படும். பின்னர் காசி விஸ்வநாதர் கோயிலில் சிலை பிரதிஷ்டை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.