

கேரளாவில் மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு, தேசத்துரோகம் உள்ளிட்ட குற்றங்களுக்காக ரூபேஷ் என்பவரை போலீஸார் கைது செய்தனர். தீவிரவாத தடுப்பு சட்டம் மற்றும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் இருந்து விடுவிக்க கோரி ரூபேஷ் தாக்கல் செய்த மனுவை அமர்வு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
இதை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் ரூபேஷ் மேல்முறையீடு செய்தார். இவரது மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் வழக்குகளில் இருந்து ரூபேஷை விடுவித்தது. இதற்கு எதிராக கேரள அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, ஏ.எஸ்.போபன்னா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கேரள அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மனீந்தர் சிங், “குற்றம் சாட்டப்பட்டவரின் மேல்முறையீட்டு மனுவை என்ஐஏ சட்டத்தின் பிரிவு 21-ன் துணைப் பிரிவு 2-ன் கீழ் உயர் நீதிமன்ற தனி நீதிபதி விசாரிக்க முடியாது. இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு மட்டுமே விசாரிக்க முடியும்” என வாதிட்டார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் கேரள உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தனர். மேலும் ரூபேஷின் மேல்முறையீட்டு மனுவை 2 நீதிபதிகளைக் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு விசாரித்து, மனுவுக்கு 6 மாதங்களுக்குள் தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டனர்.