

காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பான வழக்குகளை ஜூலை 19-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்காமல் கர்நாடக அரசு ஆண்டுதோறும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனுக்கள் உள்பட பல்வேறு வழக்குகளையும் ஒன்றாக விசாரிப்பதற்காக நீதிபதிகள் செலமேஷ்வர், ஆர்.கே அகர்வால், ஏ.எம்.சாப்ரே ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வை உச்ச நீதிமன்றம் அமைத்தது.
இதையடுத்து நேற்று உச்ச நீதிமன்றத்தில் அனைத்து வழக்குகளும் ஒன்றாக விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலி நாரிமன், ‘‘காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதால், தங்கள் தரப்பு வாதங்களை எடுத்துரைக்க கால அவகாசம் அளிக்க வேண்டும்’’ என வாதிட்டார். இதற்கு தமிழக அரசு வழக்கறிஞர்கள் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. இதையடுத்து வழக்குகளை ஜூலை 19-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மூல வழக்குகள், தமிழக அரசின் 4 இடைக்கால மனுக்கள், கர்நாடக முதல்வர் மீதான அவதூறு வழக்குகள் ஆகியவை நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.