பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல்: பிரசாந்த் கிஷோர் உதவியை நாடுகிறது காங்கிரஸ்?

தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி | கோப்புப்படம்
தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி | கோப்புப்படம்
Updated on
1 min read

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் வருவதையொட்டி, அதில் வெல்வதற்காக தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோரின் உதவியை காங்கிரஸ் கட்சி நாடக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி நேற்று மாலை கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பேசியபோது இது தொடர்பான தகவலைத் தெரிவித்தார்.

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியைத் தக்கவைக்க முயன்று வருகிறது. ஆனால், எதிர்க்கட்சிகளான பாஜக, சிரோன்மணி அகாலிதளம் போன்றவை ஆட்சியைக் கைப்பற்றத் தீவிரமாக இருக்கின்றன. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய அமரிந்தர் சிங்கும் தனிக்கட்சி அமைத்து வாக்குகளைப் பிரிக்க உள்ளார்.

இதனால் காங்கிரஸ் கட்சி ஆட்சியைத் தக்கவைக்குமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் உதவியை நாட உள்ளதாகத் தெரிகிறது.

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி நேற்று பேசினார். அப்போது, மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரிஸ் சவுத்ரி தன்னிடம் வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு காங்கிரஸ் அரசியல் ஆலோசகராக தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது எனக் குறிப்பிட்டார்.

முதல்வராக அமரிந்தர் சிங் இருந்தபோது, அரசின் முதன்மை ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் கடந்த மார்ச் மாதம் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம் அந்தப் பதவியிலிருந்து பிரசாந்த் கிஷோர் விலகினார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜிக்குத் தேர்தல் வியூக வல்லுநராக பிரசாந்த் கிஷோர் செயல்பட்டார். இதில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியைத் தக்கவைத்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in