

இடைத்தேர்தலில் பாஜகவுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான போட்டி சமமாகத்தான் இருக்கிறது. பல்வேறு மாநிலங்களில் 2022-ம் ஆண்டு நடக்கும் தேர்தலில் ஆட்சி மாற்றம் தெரிகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
13 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் காலியாக இருந்த 30 சட்டப்பேரவைத் தொகுதிகள், 3 மக்களவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் கடந்த மாதம் 30-ம் தேதி நடந்தது. இந்தத் தேர்தலில் இமாச்சலப் பிரதேசத்தில் பாஜகவைத் தோற்கடித்துள்ளது காங்கிரஸ் கட்சி. மேற்கு வங்கத்தில் பாஜகவை வீழ்த்தி 4 இடங்களையும் திரிணமூல் காங்கிரஸ் வென்றுள்ளது.
பாஜகவுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடுமையான போட்டி இருந்ததையும், சமமான இடங்களை இருதரப்பினரும் பிடித்ததையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் கோவா, மணிப்பூர், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்குச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் இடைத்தேர்தல் முடிவுகள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டரில் பாஜகவைக் கிண்டல் செய்து கருத்துப் பதிவிட்டுள்ளார். அவர் கூறுகையில், “30 சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் குறித்த சிந்தனையைத் தூண்டும் ஆய்வுகள் இங்கே உள்ளன.
அதாவது பாஜக 7 இடங்களிலும், அதன் உறுதிப்படுத்தப்பட்ட கூட்டணிக் கட்சிகள் 8 இடங்களிலும் வென்றுள்ளன. காங்கிரஸ் கட்சி 8 இடங்களிலும், பாஜக அல்லாத கட்சிகள் 7 இடங்களிலும் வென்றுள்ளன. இதில் பாஜகவுடன் மறைமுகக் கூட்டணி அமைத்த ஒய்எஸ்ஆர் காங்கிஸ் கட்சி ஒரு இடத்தை வென்றுள்ளது. மற்ற 6 இடங்களையும் பாஜக அல்லாத கட்சிகள் கைப்பற்றியுள்ளன.
இன்றுள்ள நிலவரப்படி பாஜகவுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான போட்டி சமமாக இருக்கிறது. 2022-ம் ஆண்டில் மாற்றத்துக்கான வழி இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் கட்சி கூறுகையில், “இடைத்தேர்தல் முடிவுக்குப் பின் பிரதமர் மோடி தனது அகங்காரத்தைக் குறைத்துக்கொண்டு, 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், பெட்ரோல் டீசல் கொள்ளையை நிறுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.