

குஜராத் முதல் அருணாச்சல பிரதேசம் வரை சைக்கிளில் குறுகிய நாட்களில் பயணம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார் ராணுவ அதிகாரி.
இந்திய ராணுவத்தின் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் மெக்கானிக்கல் இன்ஜினீயர் (இஎம்இ) பிரிவில் லெப்டினன்ட் கர்னலாக பணியாற்றி வருபவர் பாரத் பன்னு. இவர் அண்மையில் குஜராத் முதல் அருணாச்சல பிரதேசம் வரையிலான 3,800 கிலோமீட்டர் தூரத்தை வேகமாகக் கடந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
இந்த தூரத்தை கடக்க அவர் 9 நாட்கள், 7 மணி நேரம், 5 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளார். இதையடுத்து இவரது பெயர் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறவுள்ளது.
இதுகுறித்து ராணுவ அதிகாரி பாரத் பன்னு கூறும்போது, “சைக்கிள் ஓட்டுவது சுதந்திரமான விஷயத்தை உருவாக்கிறது. மேலும் நமது ஆன்மாவுக்கு அதுஅமுதம் போன்றது. அதனால்தான்சைக்கிள் பயணம் மேற்கொண்டேன். பாகிஸ்தானுடன் இந்தியா போர் புரிந்து வெற்றி பெற்று 50 ஆண்டுகள் நிறைவு செய்வதைக் கொண்டாடும் வகையில் இதைச் செய்தேன். நமது ராணுவத்தில் பணிபுரிவதை பெருமையாக நினைக்கிறேன். ஏற்கெனவே சைக்கிள் பயணத்தில் 2 உலக சாதனைகளைச் செய்துள்ளேன். தற்போது 3,800 கிலோமீட்டர் தூரத்தை குறுகிய நாட்களில் கடந்த 3-வது உலக கின்னஸ் சாதனையைச் செய்துள்ளேன்.
செய்ய முடியாததை செய்து முடிக்கும் ஆற்றல் ராணுவச் சேவையின்போது எனக்குக் கிடைத்தது. அக்டோபர் 17-ம் தேதி எனது பயணத்தை குஜராத்தின் கோட்டேஸ்வரில் தொடங்கினேன். அருணாச்சலின் கிபிதூவில் பயணத்தை அக்டோபர் 26-ம் தேதி நிறைவு செய்தேன்” என்றார்.
ராணுவ அதிகாரியின் சாதனைக்கு சக அதிகாரிகள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். மேலும் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.