

முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு திறந்துவிடப்பட்ட நீரின் அளவு நேற்று குறைக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய துணை கண்காணிப்புக் குழுவினர் நேற்று அணையை ஆய்வு செய்தனர்.
முல்லை பெரியாறு அணையில் கடந்த 29-ம் தேதி முதல் கேரள பகுதிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. 142 அடி அளவுக்கு நீர்மட்டம் உயர வாய்ப்புள்ள நிலையில் கேரள அரசின் இப்போக்கு தமிழக விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து 5 மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று முன்தினம் கேரள எல்லை குமுளி அருகே லோயர்கேம்ப் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனியில் தொடங்கிய இப்போராட்டத்தைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் விவசாயிகள் போராட்டங்களை முன்னெடுக்கத் தொடங்கினர்.
இந்நிலையில் கேரளப் பகுதிக்கு 6 மதகுகள் வழியே நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் 1, 5, 6-வது மதகுகள் மூடப்பட்டன. 2, 3, 4-வது மதகுகள் வழியே விநாடிக்கு ஆயிரத்து 14 கனஅடி நீர் கேரளப்பகுதிக்கு சென்று கொண்டிருக்கிறது.
இதனிடையே நேற்று மத்திய துணை கண்காணிப்புக் குழுவினர் அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். குழுத் தலைவர் மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார், தமிழக பிரதிநிதிகள் பெரியாறு அணை செயற்பொறியாளர் சாம்இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள பிரதிநிதிகள் நீர்ப்பாசன செயற்பொறியாளர் ஹரிகுமார், உதவி பொறியாளர் பிரசித் ஆகியோர் அணையைப் பார்வையிட்டனர்.
அப்போது கசிவுநீர், பேபி அணை, நீர்வரத்து உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். இதன் அறிக்கையை மூவர் குழுவுக்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்தனர். வழக்கமாக ஆய்வுக்குப் பிறகு குமுளியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். நேற்று இக்கூட்டம் நடைபெறவில்லை.