

டெல்லியிலுள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தேவையற்றப் பொருட்களை விற்றதன் மூலம்ரூ.40 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இவற்றால், ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் 8 லட்சம் சதுர அடி இடமும் காலியாகி உள்ளது.
டெல்லியில் நாடாளுமன்றத் துக்கான புதிய கட்டிடத் துடன் மத்திய அரசு அலுவலகங்களுக் காகவும் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகள் முடிந்த பின் அங்கு மாறுவதற்காக இப்போதே அலுவலகங்கள் தயாராகி வருகின்றன. இதன் ஒரு கட்டமாக அந்த அலுவலகங்களில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தேவையற்ற பொருட்கள், நிலுவையில்உள்ள கோப்புகள் உள்ளிட்டஅனைத்தையும் அப்புறப்படுத் தும்படி சமீபத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தி இருந்தார்.
இதில் பழுதடைந்த குளிர்சாதன பெட்டிகள், குளிர்சாதன பெட்டிகள், மரச்சாமான்கள், கணினிகள், தீர்வு காணப்பட்ட கோப்புகளின் தாள்கள் உள்ளிட்ட பல பொருட்கள் இடம் பெற்றிருந்தன. இவற்றை சுத்தமாக்கும் பணி கடந்த அக்டோபர் 2 முதல் 31-ம்தேதி வரை நடைபெற்றது. இவற்றுடன் நிலுவையிலிருந்த பொதுமக்களுக்கான பிரச்சினைகள், கோரிக்கைகளின் கோப்புகளும் விரைந்து தீர்வு காணப்பட்டன.
இவற்றுடன் நாடாளுமன்ற எம்.பி.க்களின் பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட கோப்புகளும் சேர்ந்துள்ளன. தேவையற்ற இவை அனைத்தையும் விற்றதில் மத்திய அரசிற்கு சுமார் 40 கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் மத்திய அமைச்சக உயர் அதிகாரிகள் வட்டாரங்கள் கூறும்போது, ‘தீர்வு காணப்பட்ட கோப்புகள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை காலி செய்ய அரசு விதிமுறைகள் உள்ளன. ஆனால், இவை கடந்த பல வருடங்களாகக் கடைப்பிடிக்கப்படவில்லை. இதனால், அவை பல கோடி ரூபாய்மதிப்பில் தேங்கி விட்டன. இவற்றை சுத்தமாக்க சுமார் 800 வகையான அரசு விதிகளும் தளர்த்தப்பட்டிருந்தன. இப்பணியின் பயனாக அனைத்து அலுவலகங்களிலும் சேர்த்து சுமார் 8 லட்சம் சதுர அடிகள் அளவிலான இடமும் சுத்தமாகி பயன்பாட்டுக்கு கிடைத்துள்ளன’ என்றன.
முன்னதாக, பிரதமர் மோடி ஆலோசனையின் பேரில் ஒவ்வொரு அமைச்சகமும் தனியாக ஒரு சுற்றறிக்கையை தனது அலுவலகங்களுக்கு அனுப்பி இருந்தது. இதில், குப்பைகளை சுத்தமாக்கும் பணியை இத்துடன் நிறுத்தி விடாமல் ஒவ்வொரு மாதத்தின் முதல் மற்றும் இறுதி வாரத்தின் புதன் கிழமைகளில் தொடர வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.