

ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற பத்வேல் தொகுதி இடைத் தேர்தலில் 1.12 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் தாசரி சுதா முன்னிலை பெற்றுள்ளார். பாஜக இரண்டாமிடம் பிடித்துள்ளது.
நாடு முழுவதும் நடந்த 3 மக்களவை தொகுதி; 29 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (நவ.2) காலை தொடங்கியது.
கடந்த சனிக்கிழமையன்று அசாமில் 5, மேற்குவங்கத்தில் 4, மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் மேகாலயாவில் தலா 3 தொகுதிகள், பிஹார், கர்நாடகா, ராஜஸ்தானில் இரண்டு தொகுதிகள், ஆந்திரப் பிரதேசம், ஹரியாணா, மகாராஷ்டிரா, மிசோரம், தெலங்கானாவில் தலா ஒரு தொகுதி என மொத்தம் 29 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது.
ஆந்திரப் பிரதேசத்தில் பத்வேல் (எஸ்சி) தொகுதியிலும் கடந்த சனிக்கிழமை இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் தாசரி சுதா போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் களமிறங்கின. ஆனால் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிகள் போட்டியிட வில்லை.
இந்த தொகுதியில் 1.12 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் தாசரி சுதா முன்னிலை பெற்றுள்ளார். பாஜகவின் பனத்தலா சுரேஷ் 22,000க்கும் குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளார்.
2019 தேர்தலில் ஓய்எஸ்ஆர் கட்சி பெற்ற வெற்றியை விடவும் தற்போது அந்த கட்சி இரண்டு மடங்கு அதிகமாக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் பாஜக இரண்டாவது இடம் பிடித்துள்ளது.