

2022-ம் ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் செல்லும் முஸ்லிம்களுக்காக, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை நேற்று தொடங்கியதாக மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.
மும்பையின் தெற்குப் பகுதியில் உள்ள ஹஜ் மாளிகையில் மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி நேற்று பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''2022-ம் ஆண்டுக்கான ஹஜ் புனிதப் பயணம் செல்வோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான செயல்முறை தொடங்கிவிட்டது. இந்தப் பயணத்துக்குச் செல்ல விரும்புவோர் 2022, ஜனவரி 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது தவிர முஸ்லிம்கள், ஹஜ் மொபைல் ஆப்ஸ் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
உள்நாட்டுப் பொருட்களை ஊக்களிக்கும் வகையில் ஹஜ் செல்லும் பயணிகள் அறிவுறுத்தப்படுவார்கள். படுக்கை விரிப்புகள், துண்டுகள், குடை உள்ளிட்டவற்றை சவுதி அரேபியாவில் அந்நாட்டுப் பணத்தில்தான் வாங்குவார்கள். இந்த முறை இந்தியாவிலேயே இந்தியப் பணத்திலேயே வாங்க அறிவுறுத்தப்படுவார்கள்.
சவுதி அரேபியாவின் விலையோடு ஒப்பிடுகையில், 50 சதவீதம் குறைவாக, ஹஜ் புனிதப் பயணம் செல்வோருக்காக விற்கப்படும். இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட சில முனையங்களில் கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் இந்தியர்களை ஹஜ் புனிதப் பயணத்துக்காக இந்திய அரசு அனுப்பி வருகிறது.
மத்திய அரசு செய்துள்ள இந்த வசதிகள் மூலம் பயணிகளுக்குக் கோடிக்கணக்கான பணம் மிச்சமாகும். ஹஜ் புனிதப் பயணம் செல்வோர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை கரோனா வைரஸ் தடுப்பு முறைகளைப் பின்பற்றி எடுக்கப்படும். இந்தியா, சவுதி அரேபியா அரசுகள் கூடி ஆலோசித்து இந்த முடிவை எடுக்கும்.
ஹஜ் புனிதப் பயணம் செல்வோர் புறப்படும் இடங்கள் 21லிருந்து 10 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, அகமதாபாத், பெங்களூரு, கொச்சின், டெல்லி, கவுகாத்தி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை, ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் இருந்து மட்டுமே புறப்படுவார்கள்.
கடந்த 2020, 2021-ம் ஆண்டில் ஆண்கள் துணையின்றிச் செல்லும் மெஹ்ரம் பயணத்துக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்தனர். அவர்களின் விண்ணப்பம் 2022-ம் ஆண்டு பரிசீலிக்கப்படும்''.
இவ்வாறு நக்வி தெரிவித்தார்.