Published : 02 Nov 2021 12:38 PM
Last Updated : 02 Nov 2021 12:38 PM

‘‘மேற்குவங்கத்தில் பாஜக கதை முடிந்து விட்டது’’ - திரிணமூல் அனைத்து தொகுதிகளிலும் முன்னிலை; தொண்டர்கள் கொண்டாட்டம்

மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளால் மக்கள் வருத்தப்படுகிறார்கள், இதைதான் தேர்தல் முடிவு காட்டுகிறது, மேற்குவங்கத்தில் பாஜகவின் கதை முடிந்து விட்டது என திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் கூறினார்.

நாட்டில் காலியாக உள்ள 3 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 29 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த சனிக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது.

மத்தியபிரதேசத்தில் கந்த்வா, இமாச்சலபிரதேசத்தில் மாண்டி, யூனியன் பிரதேசமான தாத்ரா நாகர் ஹவேலி ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதுபோல் அசாம் (5 தொகுதிகள்), மேற்கு வங்கம் (4), ம.பி., இமாச்சலபிரதேசம், மேகாலயா (தலா 3), பிஹார், கர்நாடகா, ராஜஸ்தான் (தலா 2), ஆந்திரா, ஹரியாணா, மகாராஷ்டிரா, மிசோரம், தெலங்கானா (தலா 1) என 13 மாநிலங்களில் 29 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் அனைத்து 4 இடங்களிலும் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலையிலும் உள்ளது. இந்த வெற்றியை திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் கூறியதாவது:

‘‘மேற்குவங்கத்தில் இடைத்தேர்தல் முடிவு எதிர்பார்க்கப்பட்டது போலவே அமைந்துள்ளது. நாங்கள் கடுமையாக போராடினோம், நாங்கள் பெரும் வெற்றி பெறுகிறோம். பாஜக எவ்வளவு பின்தங்குகிறதோ அவ்வளவு ஜனநாயகத்திற்கு நல்லது.

மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளால் மக்கள் வருத்தப்படுகிறார்கள். இதைதான் தேர்தல் முடிவு காட்டுகிறது. மேற்குவங்கத்தில் பாஜகவின் கதை முடிந்து விட்டது. தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைகள் எதுவும் இருக்கக்கூடாது என்று எங்கள் கட்சி அறிவுறுத்தியது. எதுவும் நடக்காது’’ எனக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x