

போதைப் பொருள் பயன் படுத்தியது தொடர்பாக பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் (23), அவரது நண்பர்கள் உள்ளிட்ட 8 பேரை போதைத் தடுப்புப் பிரிவு (என்சிபி) அதிகாரிகள் கைது செய்தனர். இதில் ஆர்யன் கான் உள்ளிட்ட 3 பேருக்கு மும்பை உயர் நீதிமன்றம் கடந்த வாரம் ஜாமீன் வழங்கியது.
இதையடுத்து, அச்சித் குமார் உள்ளிட்ட மேலும் 5 பேருக்கு, போதைப் பொருள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் மும்பை சிறப்பு நீதிமன்றம் கடந்த 30-ம் தேதி ஜாமீன் வழங்கியது.
இது தொடர்பான விரிவான உத்தரவு கடந்த 31-ம் தேதி வெளியானது.
அதில், “இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆர்யன் கான் உள்ளிட்டோருக்கு அச்சித் குமார் போதைப் பொருளை வழங்கியதற்கு ஆதாரமாக வாட்ஸ் அப் உரையாடல் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் உரையாடலை மட்டுமே போதுமான ஆதாரமாக கருத முடியாது. மேலும் இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளவருக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. எனவே, அச்சித் குமார் உட்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது. -பிடிஐ