‘‘ஜின்னாவோடு இந்திய முஸ்லிம்களுக்கு தொடர்பில்லை; அகிலேஷ் வரலாறு படிக்க வேண்டும்’’- ஓவைசி கடும் எதிர்ப்பு

‘‘ஜின்னாவோடு இந்திய முஸ்லிம்களுக்கு தொடர்பில்லை; அகிலேஷ் வரலாறு படிக்க வேண்டும்’’- ஓவைசி கடும் எதிர்ப்பு
Updated on
1 min read

முகமது அலி ஜின்னாவோடு இந்திய முஸ்லிம்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை, அகிலேஷ் யாதவ் வரலாறு படிக்க வேண்டும் என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார்.

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது ‘‘சர்தார் பட்டேல், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, முகமது அலி ஜின்னா ஆகியோர் ஒரே கல்வி நிறுவனத்தில் படித்தார்கள். அவர்கள் பாரிஸ்டர்களானார்கள். இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடினார்கள். இரும்பு மனிதர் வல்லபாய் பட்டேல் ஆர்எஸ்எஸ் சித்தாத்தத்துக்கு தடைவிதித்தார்’’ எனக் கூறினார்.

இந்திய சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்களுடன் முகமது அலி ஜின்னாவை இணைத்து அகிலேஷ் யாதவ் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி, அகிலேஷ் யாதவ் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

‘‘முகமது அலி ஜின்னாவோடு இந்திய முஸ்லிம்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. எங்களுடைய மூதாதையர்கள் இரண்டு நாடு என்ற கோட்பாடை நிராகரித்தனர். இந்தியா தங்களுடைய நாடு என முடிவு செய்தனர். இதனை அகிலேஷ் யாதவ் புரிந்து கொள்ள வேண்டும்.

அகிலேஷ் யாதவ் ஒரு குறிப்பிட்ட மக்களை சந்தோசப்படுத்த இவ்வாறு கூறியிருக்கலாம். வரலாற்றை படிக்க வேண்டும். அகிலேஷ் யாதவ், அவரது ஆலோசகரை மாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in