

டெல்லி பல்கலைகழகத்தின் இரண்டு உறுப்புக் கல்லூரிகளுக்கு இந்துத்துவா அரசியலின் முன்னோடி விநாயக் தாமோதர் சாவர்கர், முன்னாள் மத்திய அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் பெயர்களை வைக்கப்பட உள்ளன.
டெல்லியில் பல்வேறு பகுதிகளில் அமைந்த உறுப்புக் கல்லூரிகளுடன் இயங்குவது டெல்லி பல்கலைகழகம். மத்திய பல்கலைகழகமான இதன் நிர்வாகக் குழுக் கூட்டம் கடந்த ஆகஸ்டில் நடைபெற்றது.
இதில், அப்பல்கலைகழகத்தின் இரண்டு புதிய உறுப்புக் கல்லூரிகளுக்கு பல்வேறு பிரிவின் தலைவர்கள் பெயர்கள் வைக்க உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட்டது. இதுவன்றி மேலும் பல முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளது.
கல்லூரிகளின் பெயர்களாக நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் பட்டேல், இந்துத்துவா முன்னோடியான வீர் சாவர்கர், முன்னாள் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றன. சில உறுப்பினர்கள், மறைந்த பாஜக தலைவர்களான சுஷ்மா ஸ்வராஜ், அருண்ஜேட்லி ஆகியோர் பெயர்களும் குறிப்பிட்டிருந்தனர்.
ஆன்மீக குருவான சுவாமி விவேகனந்தர், சமூக சீர்திருத்தவாதியான ஜோதிபாய் புலே மற்றும் டெல்லியின் முதலாவது முதல் அமைச்சரான சவுத்ரி பிரம்ம பிரகாஷ் பெயர்களும் அக்கூட்டத்தினார் பரிந்துரைக்கப்பட்டது.
எனினும், இதன் மீதான இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் டெல்லி பல்கலைகழகத்தின் துணைவேந்தரான யேகேஷ் சிங்கிடம் அளிக்கப்பட்டிருந்தது. இதனால், துணைவேந்தர் யேகேஷ் தற்போது புதிய இரண்டு உறுப்புக் கல்லூரிகளுக்கும் பெயர்களை முடிவு செய்திருப்பதாகத் தெரிந்துள்ளது.
இவற்றில் ஒன்றாக வீர் சாவர்கர் பெயரும், மற்றொரு கல்லூரிக்கு டெல்லியின் முன்னாள் முதல்வருமான சுஷ்மா ஸ்வராஜின் பெயர் வைக்கப்பட இருப்பதாகத் தகவல் பரவியுள்ளது. இது மத்திய கல்வித்துறையின் ஒப்புதலும் பெற்று அதிகாரபூர்வமாக விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.