

தலிபான்கள் இந்தியாவைக் குறிவைத்தால்; வான்வழித் தாக்குதல் நிச்சயமாக நடத்தப்படும் என எச்சரித்துள்ளார் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.
உத்தரப் பிரதேசத்தில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டிக்கொள்ள 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து அங்கு பிரமாண்டமான ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டுவிழாவை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் முழுவதும் வரும் 2023ல் நிறைவுபெறும் என தெரிகிறது.
அயோத்தியில் உள்ள ஸ்ரீராம ஜென்மபூமியில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சிறுமி அனுப்பிய காபூல் நதி நீரை கொண்டு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஞாயிற்றுக்கிழமை 'ஜல் அபிஷேகம்' செய்தார். பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டார்.
இதன் ஒரு பகுதியாக லக்னோவில் சமாஜிக் பிரதிநிதி சம்மேளன் கூட்டத்தில் அவர் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு வலிமையடைந்துள்ளது. இந்திய தேசத்தின் மீது எந்த ஒரு நாடும் தாக்குதல் எண்ணத்துடன் பார்வையைப் பாய்ச்ச முடியாது. இன்று பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் தலிபான்களால் தவிக்கின்றன. ஆனால், இந்தியா மீது ஓர் பார்வை பட்டாலும் அவர்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்படும் என்று அவர்களுக்குத் தெரியும்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் மீது விமர்சனம்:
உ.பி.,யின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கானப் பிரச்சாரம் தொடங்கி விட்டது. அடுத்த வருடம் தொடக்கத்தில் நடைபெற உள்ள தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் கிடைக்கும் மேடைகளில் எல்லாம் பிரச்சாரம் செய்கின்றன.
அந்த வகையில் நேற்று லக்னோவில் சமாஜிக் பிரதிநிதி சம்மேளன் கூட்டத்தில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் எதிர்க்கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
உ.பி.யின் சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பாரை முதல்வர் யோகி ஆதித்யநாத் கடுமையாக விமர்சித்தார். அவர் வாரிசு அரசியல் செய்வதாகக் குற்றஞ்சாட்டினார். மேலும், சுஹல்தேவுக்கு பாஜக நினைவிடம் அமைக்கிறது ஆனால் ராஜ்பார் அவர் குடும்பத்தை மட்டுமே வளர்க்கிறார் என்று விமர்சித்தார்.