Published : 01 Nov 2021 03:05 AM
Last Updated : 01 Nov 2021 03:05 AM

வடகிழக்கு பகுதியில் வங்கி சேவை விழிப்புணர்வு: வங்கியாளர்கள் குழு ஆலோசனை கூட்டத்தில் முடிவு

மணிப்பூர் மாநிலம் இம்பால் நகரில் நடைபெற்ற வங்கியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார் மத்திய நிதித் துறை இணையமைச்சர் பகவத் கிஷண்ராவ் காரத்.

குவாஹாட்டி

வடகிழக்கு மாநிலங்களில் வங்கி சேவைகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வங்கியாளர்கள் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கிஷண்ராவ் காரத், அசாம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது குவாஹாட்டி மற்றும் இம்பால் நகரங்களில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பல்வேறு வங்கிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ)தலைமையிலான வங்கியாளர்கள் குழு இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றது. இக்கூட்டத்தில் அசாம் மாநில நிதி அமைச்சர் அஜந்தா நியோக், மணிப்பூர் மாநில துணை முதல்வர் யும்னாம் ஜோய்குமார் சிங் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

அசாம் மாநிலத்தில் 57 புதிய வங்கிக் கிளைகளை தொடங்குவது என்றும், மணிப்பூர் மாநிலத்தில் 30 கிளைகளை தொடங்குவது என்றும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மக்களிடையே சேமிக்கும் பழக்கம் மற்றும் வங்கி சார்ந்த நடவடிக்கைகளை ஏற்படுத்தும் விதமாக அசாம் மாநிலத்தில் 33 மாவட்டங்களில் விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதேபோன்று மணிப்பூரில் 16 மாவட்டங்களில் பிரச்சாரம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்தப் பிரச்சாரத்தில் நபார்டு வங்கியும் ஈடுபட முன்வந்துள்ளது.

மக்களிடையே வங்கி சார்ந்த விழிப்புணர்வை உருவாக்குவது, வங்கி பரிவர்த்தனையை கற்றுத் தருவது, வங்கிகள் மக்களுக்கு அளிக்கும் சேவைகளை விளக்குவது, அடல் ஓய்வூதிய திட்டத்தை மக்களுக்கு எடுத்துக் கூறுவது மேலும் மத்திய அரசின் திட்டங்களான பிஎம்ஜேஜேபிஒய், பிஎம்எஸ்பிஒய் உள்ளிட்டவற்றின் பலன்களை எடுத்துக் கூறுவதும் அடங்கும்.

குவாஹாட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 188 பயனாளிகளுக்கு ரூ.21.92 கோடி கடன் வழங்கப் பட்டது. மணிப்பூரில் 585 பயனாளிகளுக்கு ரூ.39.16 கோடி கடன் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக அசாம் மாநிலத்தில் மோட்புங் மற்றும் ஜிர்பாம் பகுதியில் இரண்டு புதிய கிளைகளை எஸ்பிஐ தொடங்கியுள்ளது.

இதை மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் கிஷண்ராவ் காரத் தொடங்கி வைத்தார்.வங்கிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராக எஸ்பிஐ-யின் வடகிழக்கு பிராந்திய தலைமைப் பொது மேலாளர் ஆர்.எஸ். ரமேஷ் நியமிக்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x