

இந்தியாவின் இரும்புப் பெண்மணியை வரலாற்றிலிருந்து பாஜகதான் மறைக்கப் பார்கிறது என்றால் நீங்களுமா? என்று இந்திரா காந்தி நினைவு நாளில் பஞ்சாப் அரசை காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது.
இன்று மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவின் இரண்டாவது பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியின் திடீர் மரணத்திற்குப் பின் இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராக 1966ல் பதவியேற்றார்.
1977 மார்ச் வரை சுமார் 10 ஆண்டுக்காலம் பதவியிலிருந்தார். பின்னர் மீண்டும் 1980ல் பிரதமராக பொறுப்பேற்று 1984ஆம் இதே நாளில் அவரது மெய்க்காப்பாளர்கள் இருவரால் சுட்டுக்கொல்லப்படும்வரை இரண்டாவது 5 ஆண்டுக்காலம் பதவி வகித்தார். இந்திரா காந்தியின் படுகொலை இந்திய வரலாற்றின் மிகப்பெரிய சோகமாக அமைந்துவிட்டது.
மத்தியில் காங்கிரஸ் ஆளுங்கட்சியாக இருந்தவரை வழக்கமாக ஆண்டுதோறும் இந்திரா காந்தி நினைவுகூரப்பட்டுவந்தார்.
பின்னர் பஞ்சாப் உள்ளிட்ட காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகளில் மட்டுமே ஆண்டுதோறும் இந்நாளில் இந்திரா நினைவுகூரப்படுவது வழக்கமானது. இந்த ஆண்டு அந்த நடைமுறை கைவிடப்பட்டதாகத் தெரிகிறது.
இதனால் இந்திராவை நினைவுகூறும் விளம்பரங்கள் எதுவும் இல்லை என்ற குற்றச்சாட்டு காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநில அரசின் மீது எழுந்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சுனில் ஜெய்கர், இந்திரா நினைவுநாளில் அவரை நினைவுகூறாததற்கு பஞ்சாப் அரசை கடுமையாக சாடியுள்ளார்.
கடந்த ஆண்டு இந்திராவைப் போற்றி அமரீந்தர் சிங் ஆட்சியில் வெளியிடப்பட்ட ஒரு விளம்பரத்தை இணைத்து ட்விட்டர் தளத்தில் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து ஜெய்கர் கூறியுள்ளதாவது:
''வரலாற்றிலிருந்து 'இந்தியாவின் இரும்புப் பெண்மணியை பாஜக அழிக்கப் பார்ப்பதை அது அவர்கள் அரசியல் என்று புரிந்துகொள்ள முடிகிறது. பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி இல்லையா? நீங்களுமா இப்படி செய்வது?
இந்த ஆண்டு சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான பஞ்சாப் அரசின் இந்திராவை நினைவுகூறும் விளம்பரம் எதுவும் காணப்படாததால், இந்திராவை நினைவுநாளில் கடந்த ஆண்டு இந்த அரசாங்கத்தின் விளம்பரத்தை நான் பயன்படுத்துவதை கேப்டன் சாப் (சிங் என்று அழைக்கப்படும்) பொருட்படுத்த மாட்டார் என்பது எனக்குத் தெரியும்."
இவ்வாறு தனது பதிவில் காங்கிரஸ் மூத்த தலைவர் சுனில் ஜெய்கர் தெரிவித்துள்ளார்.