சிவசேனா முன்னாள் தலைவர் பால் தாக்கரேவை கொலை செய்ய லஷ்கர் தீவிரவாதிகள் திட்டமிட்டனர்: குறுக்கு விசாரணையில் ஹெட்லி தகவல்

சிவசேனா முன்னாள் தலைவர் பால் தாக்கரேவை கொலை செய்ய லஷ்கர் தீவிரவாதிகள் திட்டமிட்டனர்: குறுக்கு விசாரணையில் ஹெட்லி தகவல்
Updated on
2 min read

சிவசேனா முன்னாள் தலைவர் பால் தாக்கரேவை கொலை செய்வதற்கு, லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் திட்டமிட்டனர் என்று தீவிரவாதி டேவிட் ஹெட்லி கூறியுள்ளார்.

மும்பை தொடர் குண்டுவெடிப் பில் முக்கிய குற்றவாளியான பாகிஸ் தான் வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர் டேவிட் ஹெட்லி (55), தற்போது அமெரிக்க சிறையில் இருக்கிறார். மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் அப்ரூவராக மாறிய ஹெட்லி, சிறையில் இருந்த படியே வீடியோ கான்பரன்ஸ் மூலம் மும்பை நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார்.

இந்நிலையில், 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிய மற்றொரு முக்கிய குற்றவாளி அபு ஜூண்டால் சார்பில் அவரது வழக்கறிஞர் அப்துல் வகாப் கான் நேற்றுமுன்தினம் தனது குறுக்கு விசாரணையை தொடங்கினார். மும்பை செஷன்ஸ் நீதிபதி ஜி.ஏ.சனாப் முன்னிலையில் நடந்த குறுக்கு விசாரணையில் பல தகவல்களை ஹெட்லி கூறினார்.

இரண்டாவது நாளாக நேற்று நீதிபதி சனால் முன்னிலையில் ஹெட்லியிடம் அப்துல் வகாப் குறுக்கு விசாரணை நடத்தினார். அப்போது ஹெட்லி கூறியதாவது:

சிவசேனா தலைவர் பால் தாக்கரேவை மும்பையில் கொலை செய்வதற்கு, லஷ்கர் இ தொய்பா இயக்கத்தினர் திட்டமிட்டனர். அதற்காக தீவிரவாதி ஒருவரை அனுப்பினர். போலீஸார் அவரை கைது செய்து விட்டதால், பால் தாக்கரேவை கொல்ல முடியாமல் போனது. எனினும், போலீஸ் காவலில் இருந்து அந்த தீவிரவாதி எப்படியோ தப்பிவிட்டார். நானும் 2 முறை சேனா பவனுக்கு சென்று வந்திருக்கிறேன்.

தாக்கரேவைத் தவிர வேறு யாரை எல்லாம் கொலை செய்ய லஷ்கர் திட்டமிட்டது என்ற விவரம் எனக்கு தெரியாது.

இவ்வாறு ஹெட்லி கூறினார்.

ஆனால், எப்போது அவர் சேனா பவனுக்கு சென்று வந்தார், பால் தாக்கரேவை கொலை செய்ய வந்த தீவிரவாதி யார் போன்ற விவரங்களை ஹெட்லி கூறவில்லை.

‘‘கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி மும்பையில் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் இந்தியா வந்து செல்ல எவ்வளவு செலவு செய்தீர்கள்’’ என்று வழக்கறிஞர் அப்துல் வகாப் கேள்வி கேட்டார். அதற்கு ஹெட்லி பதில் அளிக்கையில், ‘‘அவ்வளவு சரியாக தெரியவில்லை. ஆனால், 30 முதல் 40 லட்சம் ரூபாய்க்குள் இருக்கும். அதுவும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ.தான் அந்த பணத்தை செலவிட்டது. அவர்களிடம் இருந்து நான் பணம் பெற்றேன் என்ற தகவல் தவறு’’ என்றார்.

தொடர்ந்து ஹெட்லி கூறுகை யில், “கடந்த 2008 தாக்குதல் நடந்த பிறகு 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் அல் கய்தா தீவிரவாத அமைப்பின் சார்பில் மீண்டும் தாக்குதல் நடத்த இந்தியாவுக்கு சென்று வந்தேன். அப்போது அதன் தலைவர் இலியாஸ் காஷ்மீரி எனக்கு ஒரு லட்சம் பாகிஸ்தான் ரூபாய் தந்தார்.

மும்பை தாக்குதலுக்கு பிறகு லஷ்கர் அமைப்பின் மீது சர்வதேச நாடுகளின் கவனம் திரும்பியது. அதனால் இந்தியாவில் தாக்குதல் நடத்தும் எண்ணத்தை லஷ்கர் கைவிட்டுவிட்டது என்று கூறுவது உண்மையல்ல. உண்மையில் டென்மார்க்கில் தாக்குதல் நடத்தும் திட்டத்தைதான் லஷ்கர் கைவிட்டது” என்றார்.

கசாப் நல்லவரா கெட்டவரா: நீதிமன்றத்தில் ஹெட்லி பதில்

அபு ஜுண்டாலின் வழக்கறிஞர் அப்துல் வகாப் கான் குறுக்கு விசாரணையின் போது டேவிட் ஹெட்லி கூறுகையில், ‘‘மும்பையில் தாக்குதல் நடத்திய 10 தீவிரவாதிகளில் ஒருவரைக் கூட தனிப்பட்ட முறையில் எனக்கு தெரியாது. ஆனால், அஜ்மல் கசாப் ‘ரகமதுல்லா அலியா’வின் போட்டோவை இணையதளத்தில் பார்த்தேன்’’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட அப்துல் வகாப், ‘‘அஜ்மல் கசாப் பெயருக்கு பின்னால் ரகமதுல்லா அலியா என்று ஏன் சொல்கிறீர்கள்’’ என்று கேட்டார். அதற்கு ஹெட்லி கூறுகையில், ‘‘ஒருவர் இறந்து விட்டால் அவர் நல்லவரா, கெட்டவரா என்று பார்க்கக் கூடாது. அவருக்காக பிரார்த்தனை செய்வது மரபு. கசாப் நல்லவரா, கெட்டவரா என்று எனக்குத் தெரியாது’’ என்றார். ‘‘மும்பையில் தாக்குதல் நடத்தி 164 பேரை கொன்றது நல்லதா, கெட்டதா’’ என்று அப்துல் வகாப் கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெட்லி கூறுகையில், ‘‘கொலை செய்வது நல்ல செயல் இல்லை என்பது உண்மைதான்’’ என்றார்.

சந்தோஷமா, இல்லையா வழக்கறிஞர் கேள்வி

‘‘மும்பை தாக்குதலில் ஏற்பட்ட உயிர்ச்சேதம், பொருட்சேதம் உங்களுக்கு சந்தோஷமா?’’ என்று வழக்கறிஞர் அப்துல் வகாப் கேட்டார். அதற்கு ஹெட்லி, ‘‘இது விதண்டாவாத கேள்வி. இந்த கேள்விக்கு ‘சந்தோஷம்’ என்றாலும் தவறான பதிலாகும். சந்தோஷம் இல்லை என்றாலும் தவறான பதிலாகும். என்னை என்ன சொல்ல சொல்கிறீர்கள்’’ என்று எதிர் கேள்வி எழுப்பினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in