Published : 31 Oct 2021 03:08 AM
Last Updated : 31 Oct 2021 03:08 AM

ஆதார் எண் போல ஒவ்வொரு முகவரிக்கும் தனித்தனியாக மின்னணு முகவரி குறியீடு வழங்க மத்திய அரசு திட்டம்: வர்த்தக நிறுவனங்கள் இணைய வழியில் உறுதிப்படுத்த முடியும்

புதுடெல்லி

ஆதார் எண் போல ஒவ்வொரு முகவரிக்கும் தனித்தனியாக மின்னணு முகவரி குறியீடு (டிஏசி) வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் வர்த்தக நிறுவனங்கள் இணைய வழியில் முகவரியை சுலபமாக உறுதிப்படுத்த முடியும். இந்த குறியீட்டை வைத்து சொத்து வரியை சுலபமாக செலுத்துவது முதல் இணையவழியில் பொருட் களை வாங்குவது வரை பயன் படுத்தலாம்.

இப்போது முகவரிக்கான ஆவணமாக ஆதார் அட்டையை பயன்படுத்துகிறோம். ஆனால் அதில் இடம்பெற்றுள்ள முகவரியை மின்னணு முறையில் உறுதிப்படுத்த முடியாது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக நாட்டில் உள்ள அனைத்து முகவரியையும் புவியியல் ரீதியாக மின்னணு முகவரி குறியீடாக உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் எந்த ஒரு முகவரி யையும் இணையதளம் மூலம் உறுதிப்படுத்த முடியும். இந்தக் குறியீடை உருவாக்கும் பணியில் அஞ்சல் துறை ஈடுபட்டுள்ளது. இது தொடர்பான வரைவு அறிக்கையை இணையதளத்தில் வெளியிட்டுள்ள அஞ்சல் துறை, பொதுமக்களின் கருத்தை கோரியுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் ஆதார் எண்ணைப் போல ஒவ்வொரு தனிநபரின் குடியிருப்பு மற்றும் அலுவலக முகவரிக்கும் தனித்தனி குறியீடு வழங்கப்படும். உதாரணமாக அடுக்குமாடி குடி யிருப்பில் உள்ள ஒவ்வொரு குடியிருப்புக்கும் நிரந்தரமான தனித்தனி குறியீடு வழங்கப்படும். இந்தக் குறியீடு சரக்கு போக்குவரத்து மற்றும் மின்னணு வர்த்தக தொழில் துறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் விநியோக சேவைகள் எளிதாக இருக்கும். மோசடிகளை தடுக்கவும் முடியும்.

மேலும் வங்கிகள், காப்பீடு மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்ளிட்ட வர்த்தக துறையினர் வாடிக்கையாளரின் முகவரியை (கேஒய்சி) சுலபமாக இணைய வழியில் சரிபார்க்க டிஏசி உதவியாக இருக்கும்.

அரசின் நலத்திட்டங்களை அமல்படுத்துவதற்கும் விநியோக சேவையை எளிமையாக்கவும் டிஏசி உதவியாக இருக்கும்.

குறிப்பாக சொத்து வரி விதிப்பு, அவசரகால உதவி, பேரிடர் நிர்வாகம், தேர்தல் நிர்வாகம், கட்டமைப்பு திட்டமிடல் மற்றும் நிர்வாகம், மக்கள் தொகை கணக்கெடுப்பு, புகார்களுக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட சேவைகளை திறம்பட நிர்வகிக்க இந்த டிஏசி பேருதவியாக இருக்கும். இவ்வாறு அந்த வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x