Last Updated : 31 Oct, 2021 03:08 AM

 

Published : 31 Oct 2021 03:08 AM
Last Updated : 31 Oct 2021 03:08 AM

கர்நாடக இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பு

பெங்களூரு

கர்நாடக சட்டப்பேரவையில் காலியாக உள்ள விஜயாப்புரா மாவட்டம் சிந்தகி, ஹாவேரி மாவட்டம் ஹனகல் ஆகிய 2 தொகுதிகளில் நேற்று இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளான‌ காங்கிரஸ், மஜத ஆகியவை தனித்தனியாக போட்டியிடுகின்றன.

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பசவராஜ் அனைத்து அமைச்சர்களையும் களத்தில் இறக்கினார். காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோரும், மஜத வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் பிரதமரும் மஜத தேசிய தலைவருமான தேவகவுடா, முன்னாள் முதல்வர் குமாரசாமியும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று காலை 7 மணிக்கு சிந்தகி, ஹனகல் ஆகிய 2 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு மற்றும் கரோனா கட்டுப்பாடுகளுடன் வாக்குப் பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் மாலை 6 மணி வரை வரிசையில் நின்று வாக்களித்தனர். மாலை 6 மணி முதல் 7 மணி வரை கரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள் தனியாக‌ வாக்களிப்பதற்காக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

மாலை 5 மணி நிலவரப்படி சிந்தகியில் 56.6 சதவீதம், ஹனகலில் 64.72 சதவீத வாக்குகள் பதிவாகின. இரண்டு தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் நவம்பர் 2-ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x