Published : 11 Mar 2016 12:20 PM
Last Updated : 11 Mar 2016 12:20 PM

ரியல் எஸ்டேட் மசோதா: அறியத்தக்க 10 முக்கிய அம்சங்கள்

ரியல் எஸ்டேட் மசோதா குறித்து மாநிலங்களவையில் அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசியபோது, சென்னை வெள்ளத்தில் குடியிருப்புகள் மூழ்கியதற்கு ஆக்கிரமிப்புகளே முக்கிய காரணம். எனவே ஆக்கிரமிப்புகளை தடுக்க மசோதாவில் கடுமையான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன என்றார்.

சுமார் இரண்டரை ஆண்டு தாமதத்துக்குப் பிறகு ரியல் எஸ்டேட் மசோதா மாநிலங்களவையில் நேற்று (வியாழக்கிழமை) நிறைவேற்றப்பட்டது.

கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது 2013 ஆகஸ்ட்டில் ரியல் எஸ்டேட் மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. அதன்பிறகு கடந்த 2014 மே மாதம் பாஜக மத்தியில் ஆட்சி அமைத்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, ரியல் எஸ்டேட் மசோதாவில் சுமார் 118 திருத்தங்களை மேற்கொண்டது.

திருத்தப்பட்ட மசோதா கடந்த ஆண்டு மாநிலங்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ‘ரியல் எஸ்டேட் மசோதா வாடிக்கை யாளர்களுக்கு பாதகமாகவும் கட்டுமான நிறுவனங்களுக்கு சாதகமாகவும் உள்ளது’ என்று அந்த கட்சிகள் குற்றம்சாட்டின. அதன்பேரில் மசோதாவில் 20 முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், மசோதாவுக்கு ஆதரவு அளித்தது. இதனால் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறை வேற்றப்பட்டது.

மக்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. எனவே ரியல் எஸ்டேட் மசோதா விரைவில் மக்களவையில் நிறை வேற்றப்பட்டு சட்டமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல் எஸ்டேட் மசோதாவின் முக்கிய அம்சங்கள்:

* ஒவ்வொரு மாநிலத்திலும் ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.

* 500 சதுர மீட்டர் அல்லது 8 வீடுகள் கொண்ட குடியிருப்புகள், வணிக கட்டிடங்கள் இந்த ஆணையத்தில் கண்டிப்பாக பதிவு செய்யப்பட வேண்டும்.

* கட்டுமான நிறுவனங்களின் பணப் பரிவர்த்தனைகளை ஆணையம் கண்காணிக்கும். இதன் மூலம் கருப்பு பண புழக்கம் கட்டுப்படுத்தப்படும்.

* அடுக்குமாடி குடியிருப்பில் நுழைவு பகுதி உள்ளிட்ட பொது இடங்களை வாடிக்கையாளர்களுக்கு விற்கக்கூடாது. வீடு அமைந்துள்ள இடத்தை மட்டுமே (கார்பட் ஏரியா) விளம்பரத்தில் குறிப்பிட வேண்டும்.

* குடியிருப்பின் திட்ட வரைபடம், அரசு அனுமதி, நிலத்தின் முழு விவரம், கட்டுமான பணி மேற் கொள்ளும் துணை நிறுவனங்கள் உட்பட அனைத்து விவரங்களையும் கட்டுமான நிறுவனங்கள் வெளியிட வேண்டும்.

* வாடிக்கையாளரிடம் கட்டுமான நிறுவனம் பெற்ற பணத்தில் 70 சதவீத தொகையை வங்கியில் தனிக் கணக்கு தொடங்கி டெபாசிட் செய்ய வேண்டும்.

* குறிப்பிட்ட காலத்தில் வீட்டை ஒப்படைக்காவிட்டால் வீட்டுக் கடன் வட்டி விகிதத்தில் வாடிக்கை யாளர்களுக்கு கட்டுமான நிறுவனம் வட்டித் தொகை வழங்க வேண்டும்.

* 5 ஆண்டுகளுக்கு வீட்டில் ஏற்படும் பழுதுகளை கட்டுமான நிறுவனங்களே நிவர்த்தி செய்ய வேண்டும். கட்டுமான நிறுவனங் களுக்கும் வாடிக்கையாளர் களுக்கும் இடையே பிரச்சினை எழுந்தால் மாநில ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையத்தில் முறையிடலாம். 60 நாட்களுக்குள் அந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.

* கட்டுமான நிறுவன அதிபர்கள் முறைகேட்டில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் வாடிக்கையாளர்கள், ஏஜெண்டுகள் முறைகேடு செய்தால் ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

* ‘2022-ம் ஆண்டுக்குள் அனை வருக்கும் வீடு’ திட்டத்தை நிறைவேற்ற ரியல் எஸ்டேட் மசோதா பக்கபலமாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x